எல்.ஈஸ்வரன் எக்ஸ் தளம்
உலகம்

சிங்கப்பூர் | முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் வீட்டுச் சிறைக்கு மாற்றம்! பின்னணி என்ன?

சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டுச் சிறை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் எஸ்.ஈஸ்வரன் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

Prakash J

சிங்கப்பூர் அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஈஸ்வரன். இவர், தொழிலதிபர்களிடம் இருந்து, 4,00,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தன்னுடைய அமைச்சர் பதவியை ஈஸ்வரன் ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது. கடந்த 50 ஆண்டு காலத்தில் சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக இத்தகைய வழக்குப்பதிவு செய்யப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இதுவே முதல்முறையாகும். இந்த நிலையில், எஸ்.ஈஸ்வரன் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்.ஈஸ்வரன்

இதுகுறித்து சிங்கப்பூா் சிறைத் துறை அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’முன்னாள் அமைச்சா் எஸ்.ஈஸ்வரன் தற்போது வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வீட்டுச் சிறையில் அவா் எஞ்சிய தண்டனைக் காலத்தைக் கழிப்பாா். அவரது உடலில் மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்துவது உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.