Tangaraju Suppiah
Tangaraju Suppiah Twitter
உலகம்

சிங்கப்பூர் தமிழருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம் - ஐநா வேண்டுகோளை நிராகரித்த அரசு

Justindurai S

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரை கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், 2014-ம் ஆண்டு சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் சுப்பையா (46) என்பவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவருடன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான தங்கராஜ்க்கு தொடர்பு உள்ளது என்ற அடிப்படையில் இவரையும் வழக்கில் சேர்த்தனர். ஆனால், கடத்தல்காரர்கள் கைதின்போது தங்கராஜ் உடன் இல்லை என்றும் தங்கராஜிடம் இருந்து போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் பரவலாக கூறப்படுகிறது. எனினும், 2018-ம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தங்கராஜுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சா கடத்த முயன்றுள்ளார் என்ற வழக்கில் இந்த தண்டனை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக சிறையிலிருந்த தங்கராஜ் சுப்பையாவுக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தங்கராசுவின் குடும்பத்தினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு கடைசி நிமிட கருணை மனு கடிதங்களை வழங்கினர். ஆனால் அது நிராகரிக்கப்பட்ட சூழலில் அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

ஐநா மனித உரிமை அமைப்பு உள்ளிட்டவை தங்கராஜூ சுப்பையாவின் தூக்கு தண்டனை நிறைவேற்றத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பவரான பிரிட்டிஷ் பெரும் கோடீஸ்வரர் சர் ரிச்சர்ட் பிரான்சன் தங்கராஜுவின் மரண தண்டனையை நிறுத்தவும் அவர் மீதான வழக்கை மறுபரிசீலனை செய்யவும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தங்கராஜூ சுப்பையாவுக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிங்கப்பூரில் போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டம் கடுமையாக இருப்பதால் இவ்வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.