Nepal Flood ANI
உலகம்

இந்திய வம்சாவளி எதிர்ப்பு இனவெறிப் பதிவுகள்.. விசாரணையில் இறங்கிய சிங்கப்பூர் அரசு!

சிங்கப்பூர் டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் தகவல் அமைச்சகம் (MDDI) சமூக வலைத்தள நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, விதிகளை மீறும் இத்தகைய இனவெறிப் பதிவுகளை உடனடியாக நீக்க உத்தரவிட்டுள்ளது.

Prakash J

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 9 சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் குறித்து, சமூக வலைத்தளங்களில் இந்திய வம்சாவளியினருக்கு எதிராகப் பரப்பப்பட்ட இனவெறி மற்றும் வெறுப்புக் கருத்துகள் தொடர்பாக சிங்கப்பூர் அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெளிநாட்டினர் உள்பட சுமார் 5,000 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை, மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாயமானவர்களின் எண்ணிக்கையில் 9 சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களும் அடக்கம். இந்த நிலையில், காணாமல் போனவர்களின் பெயர்கள் மற்றும் தோற்றத்தைக் குறிப்பிட்டு, அவர்கள் ’உண்மையான சிங்கப்பூரர்களா’ என கேள்வி எழுப்பியதோடு, இனரீதியான இழிசொற்களையும் வெறுப்புக் கருத்துகளையும் சிலர் இணையத்தில் பதிவிட்டனர்.

Nepal flood

மேலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பான செய்திகளும், டெமாசெக் (Temasek) தலைவருக்கு எதிரான இனரீதியான தாக்குதல்களும் இந்த இந்திய எதிர்ப்புப் பேச்சுகளை மேலும் தீவிரப்படுத்தின. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், சிங்கப்பூர் டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் தகவல் அமைச்சகம் (MDDI) சமூக வலைத்தள நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, விதிகளை மீறும் இத்தகைய இனவெறிப் பதிவுகளை உடனடியாக நீக்க உத்தரவிட்டுள்ளது. தவிர, இத்தகைய சகிப்புத்தன்மையற்ற மற்றும் வெறுக்கத்தக்க கருத்துகளைப் பதிவிட்ட நபர்கள் மீது காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், "எந்தவொரு சமூகத்திற்கும் எதிரான பாகுபாட்டை ஏற்கவோ அல்லது இயல்பான ஒன்றாக மாற்றவோ கூடாது. இத்தகைய செயல்கள் சமூக அமைதியையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.