பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டித் தழுவினார்.
பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான கட்சி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை பெறவில்லை. மற்ற கட்சிகளுடன் உதவியுடன் இம்ரான் கான் ஆட்சியமைக்கிறார். பாகிஸ் தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமருக்கான வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து பாகிஸ்தானின் 22 வது பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்றார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில், இம்ரான் கானுக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இந்தியாவில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான சித்து கலந்து கொண்டார்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜனாதிபதி மசூத் கான் அருகில் அமர வைக்கப்பட்டார். அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமார் ஜாவேத் பஜ்வாவும் அவரும் கட்டித் தழுவிக்கொண்டனர்.
ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் முன் சித்து கூறும்போது, ‘ இம்ரான் கான் போன்றவர்கள் வரலாற்றை உருவாக்குகின்றனர். இந்த அழைப்பின் மூலம், அவர்கள் என்னை கவுரவப்படுத்தி உள்ளனர். உறவுகளை கட்டியெழுப்பும் மக்கள் மதிக்கப்படுகிறார்கள், அதை உடைப்பவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். நான் உறவுகளை மதிப்பவன். இது புதிய விடியல்’ என்றார்.