சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது அரசியல் வாழ்க்கையை தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி என்ற கலவையாக உருவாக்கியவர். ஆனால், அமைதிக்கான நோபல் விருது வென்றால், அமெரிக்க வரலாற்றில் சமாதானத் தலைவர் என்ற புதிய முகவரியைப் பெறுவார். இது, சர்ச்சைக்குரிய அதிபர் என்ற இடத்தில் இருந்து வரலாற்றை மாற்றிய உலகத் தலைவர் என்ற உயர்ந்த நிலையை தரும் என ட்ரம்ப் நம்புகிறார்.
ட்ரம்ப் நோபல் விருது பெறுவதற்கு தகுதியானவரா என்ற கேள்விக்கு பதிலாக, அவரது பதவிக்காலத்தில் முக்கிய வெளிநாட்டு கொள்கைகளில் சாதித்த முக்கிய முன்னேற்றங்களை அரசியல்வாதிகள் மற்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் முக்கியமானது Abraham ஒப்பந்தங்கள். 2020ஆம் ஆண்டு, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், மொராக்கோ, சூடான் ஆகிய நாடுகளுக்கிடையில் பல தசாப்தங்களுக்கு பிறகு, உறவுகளை புதுப்பிக்கும் வரலாற்று சமாதான ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிறைவேற்றினார். இது மத்திய கிழக்கில் நிலவிவந்த நீண்டகால மோதல்களை குறைக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.
மேலும், ட்ரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், வட கொரிய தலைவர் KIM JONG UN-ஐ நேரடியாக சந்தித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெற்றார். இருநாடுகள் இடையே அணு ஆயுத பிரச்சினைகள் தீராதிருந்தாலும், 70 ஆண்டுகளாக இருந்த முழு மௌனத்தை உடைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. மேலும், ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பதற்றங்கள் இருந்த போதிலும், ட்ரம்ப் பதவிக் காலத்தில் புதிய போர்கள் தொடங்கப்படவில்லை என்பது அரசியல் விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.
நோபல் விருது பெற்றால், போரைக் குறைத்தவன் என்ற வலுவான செய்தியை உலகிற்கு வெளிப்படுத்த முடியும். அதற்கான முயற்சியாக, உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புடினை அலாஸ்காவில் சந்திக்கிறார் ட்ரம்ப். மேலும், இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாகவும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். நோபல் விருது ட்ரம்பின் மீதான பார்வையை மாற்றுவதோடு, அமெரிக்காவில் வருங்கால தேர்தல்களில் வலுவான ஆதிக்கத்தை உருவாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேலை செய்யாமலே முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு நோபல் கொடுத்தார்கள் என்றும், தன்னிடம் உண்மையான சமாதான ஒப்பந்தங்கள் இருக்கிறது என்றும் ட்ரம்ப் பலமுறை கூறி இருந்தார்.
சமீபத்தில், தாய்லாந்து - கம்போடியா மோதலை நிறுத்திய ட்ரம்ப், அஜர்பைஜான் - அர்மேனியா இடையேயான பகையை தீர்த்து ஒப்பந்தம் மேற்கொள்ள வழிவகுத்தார். இந்த இரண்டு நாடுகளின் ஆட்சியாளர்களும், இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் அரசுகளும், ட்ரம்புக்கு நோபல் கொடுக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளன. அரசியல் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதும், எதிர்காலத்திலும் சமாதானத்தின் சின்னமாக கருதப்படுவதும் ட்ரம்பின் நோபல் விருதுக்கான இலக்காக உள்ளது. மேலும், எப்போதும் ‘ட்ரம்ப் பிராண்ட்' என்ற பெயரை நிலைநிறுத்த விரும்பும் ட்ரம்ப், நோபல் விருது மூலம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் பங்களித்தவர் என்ற பெருமையை நிறுவ முயல்கிறார்.