உலகம்

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: 2 பேர் உயிரிழப்பு

JustinDurai

அமெரிக்காவில் நூறுக்கும் மேற்பட்டோர் கூடிய விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். 

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் டக்ளஸ் கவுன்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று வீடு ஒன்றில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், திடீரென அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்து உள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 6 பேர் காயமடைந்து உள்ளனர். பலர் காயங்களுடன் வீட்டுக்கு வெளியே ஓடி உயிர் தப்பினர். 

இதுபற்றி வீட்டு உரிமையாளர் கூறும்போது, விருந்து நிகழ்ச்சியை இரவு 10 மணியளவில் முடித்து விட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் சிலர், போதைப் பொருளை புகைத்தபடி இருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விருந்தில் சம்பந்தமில்லாத இளைஞர்கள் யாரும் கலந்து கொண்டனரா? என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விருந்தின்போது இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதலால் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது யார்? எத்தனை பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்பது குறித்த தெளிவான விவரம் இல்லாததால் கிடுக்குப்பிடி விசாரணையில் இறங்கியுள்ளனர் போலீசார்.