அமெரிக்காவில் உள்ள பூங்கா ஒன்றில் சுற்றிப் பறந்த சிட்டுக் குருவியை பிடித்து பெண் ஒருவர் சித்ரவதை செய்யும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள பூங்கா ஒன்றில் நடுத்தர வயது உள்ள பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் அருகருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்கள் அருகில் ஏராளமான சிட்டுக் குருவிகள் சுற்றித் திரிகின்றன. சில சிட்டுக் குருவிகள் அவர்களின் காலை சுற்றியும் உணவைத் தேடி அலைகின்றன. அப்போது அங்கே அமர்ந்திருந்த அப்பெண், எந்தவித உதவியும் இன்றி சுற்றித் திரிந்த ஒரு சிட்டுக் குருவியை லாவகரமாக பிடித்து விடுகிறார். பின்னர் தான் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கவருக்குள் சிட்டுக்குருவியை போட்ட அந்த பெண், அதனை சித்ரவதை செய்கிறார். சிட்டுக் குருவி அதிலிருந்து மீண்டு வர எவ்வளவோ முயற்சித்த போதும் அந்த பெண் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. பக்கத்தில் இருந்த அந்த ஆணும் இதற்கு உடந்தையாகவே இருக்கிறார்.
இதனை பூங்காவிலிருந்த மற்றொரு நபர் வீடியோவாக பதிவு செய்து அதனை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. இதனிடையே பூங்காவில் உயிரினங்களை பிடிப்பதோ, துன்புறுத்துவதோ அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதுகுறித்து பூங்கா நிர்வாகம் கூறும்போது, ‘ சம்பந்தப்பட்ட நபர் யார் என்று தெரியவில்லை. அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.