ஈரான், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

’50 ஆண்டுகால நாசம்.. 52,000 பேருக்கான இழப்பீடு’ ஈரானுக்கு ஷாக் கொடுத்த Trump-ன் பதிவு!

அமெரிக்காவால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈரான் கோரியிருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பதில் ஈரானுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.. என்ன நடந்தது பார்க்கலாம்!

Rishan Vengai

ஈரானுடன் 100 நாட்களுக்கு மேலான போரால் அமெரிக்கா கடும் ராணுவ இழப்புகளை சந்தித்த நிலையில், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலக பொருளாதாரம் அதிர்ச்சியடைந்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தையில் ஈரான், போர்ச் சேத இழப்பீடு, தடைகள் நீக்கம், சொத்து விடுவிப்பு உள்ளிட்ட கடும் நிபந்தனைகள் வலியுறுத்தும் சூழலில், ட்ரம்ப் தானும் ஈரானிடம் இழப்பீடு கோருவேன் என ட்ரூத் சோஷியல் பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் உடனான 100 நாட்களுக்கு மேலான நீண்ட போரால் அமெரிக்காவிற்கு நிறைய ராணுவ இழப்புகள் ஏற்பட்டுள்ளன. டிஸ்ட்ராயர் கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள், THAAD இடைமறிப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட பல ராணுவ ஆயுதங்கள் பற்றாக்குறை ஒருபக்கம், ஈரானின் பதிலடி தாக்குதல் மறுபக்கம், முடிவை எட்டாத பேச்சுவார்த்தை இன்னொரு பக்கம் என அமெரிக்காவிற்கு ஈரான் உடனான மோதல் பெரும் சவால் நிறைந்ததாகவே இருந்துள்ளது. இந்தசூழலில் உலக எண்ணெய் வர்த்தக மையமான ஹார்முஸ் நீரிணையும் மூடப்பட்டிருப்பதால், உலகளவில் பொருளாதார வீக்கம் அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தையில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி - அதிபர் ட்ரம்ப்

முதல் கட்ட பேச்சுவார்த்தைகளில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால், அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தி மீதான தனது முற்றுகையை நீக்கவேண்டும், பல மாத கால போர்ச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், பொருளாதாரத் தடைகளை அகற்றி, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கவேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. இது நடக்காவிட்டால் ஜலசந்தியை மீண்டும் திறக்கப் போவதில்லை என்றும் ஈரான் கூறியுள்ளது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பிராந்தியப் பேச்சுவார்த்தைகளில் வாஷிங்டன் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையும் தனியாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தசூழலில் தான் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக திறக்க ஈரானிடம் வைத்த அணுசக்தி திட்ட ஒப்பந்தம் கூட வேண்டாம் என்ற முடிவில் ட்ரம்ப் இருப்பதாக வெளிவந்த செய்திகளுக்கு மத்தியில், தற்போது ஈரான் இழப்பீடு கேட்டால் தானும் இழப்பீடு கோருவேன் என ட்ரம்ப் செய்தி வெளியிட்டுள்ளார்.

ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் எழுதிய ஒரு பதிவில், கடந்த ஐந்து மாதப் போரின்போது தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு கோரும் 'சுவாரஸ்யமான யோசனை' தனக்குப் பிடித்திருப்பதாகவும், அதற்குப் பதிலாகத் தானும் இஸ்லாமியக் குடியரசிடம் இழப்பீடு கோரப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த அவருடைய பதிவில், கடந்த 5 மாத கால ராணுவ மோதலின்போது தங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு ஈரான் இழப்பீடு கேட்பதாகத் தெரிகிறது. ஆனால் இது எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் பேசப்படவில்லை. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான போராளிகளுக்காக நானும் ஈரானிடமிருந்து இழப்பீடு கோருகிறேன். கூடுதலாக, கடந்த 50 ஆண்டுகளில் ஈரான் அரசால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி எதிர்ப்பாளர்களின் குடும்பங்களுக்கும், கடந்த 5 மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேருக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என எழுதியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், “எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் இதை உறுதியாகச் சேர்க்குமாறு எனது பிரதிநிதிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்" என்று டிரம்ப் எழுதியுள்ளார். ஈரான் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக, பொருளாதார அழுத்தம் அதிகரிக்க அனுமதிக்கத் தயாராக இருப்பதாக கூறியதை தொடர்ந்து ட்ரம்ப் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.