ஓமான் கடற்பரப்பில் மரிவெக்ஸ் என்ற எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா தாக்கியதில், கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதில் இருந்த 24 இந்திய மாலுமிகள் உதவிக்காக அழைப்பு விடுத்தனர். அனைத்து மாலுமிகளையும் ஓமான் மீட்டது. அதேவேளையில், வளைகுடாப் பகுதிகளில் கப்பல் போக்குவரத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல் தொழிற்சங்கங்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
செய்தியாளர் ; M.மீரா
கடந்த டிசம்பரில் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட மாரிவெக்ஸ் (Marivex) கப்பல், முன்னதாக ஈரானிய எண்ணெயை இந்தியாவிற்குக் கொண்டு சென்றிருந்தது. திங்களன்று ஈரானிய துறைமுகம் ஒன்றிற்குச் செல்ல முயன்றதன் மூலம், அக்கப்பல் தற்போதைய முற்றுகையை மீறியதாக கூறி அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளாகியது.
எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா தாக்கியதில், கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, "எங்கள் கப்பலின் இயந்திர அறையில் ஏவுகணை தாக்கியுள்ளது. கப்பலின் அடிப்பகுதியில் ஓட்டை விழுந்துள்ளது... மொத்தம் 24 பணியாளர்கள் உள்ளனர்; அனைவரும் இந்தியர்கள். தயவுசெய்து விரைவாக உதவுங்கள், எங்களுக்கு உடனடி உதவி தேவை” என்று அவசர உதவி கேட்டு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த 24 இந்திய மாலுமிகளும் ஓமன் ராணுவத்தால் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் - அமெரிக்கப் படைகளின் உத்தரவுகளைக் கடைப்பிடிக்கத் தவறியதைத் தொடர்ந்து, 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' (USS Abraham Lincoln) கப்பலிலிருந்து புறப்பட்ட F-18 ரக போர் விமானம் ஒன்று, மாரிவெக்ஸ் கப்பலின் மீது துல்லியமாகத் தாக்கும் ஏவுகணை அல்லது குண்டு ஒன்றை வீசியதாக தெரிவித்துள்ளது. மேலும், அந்தக் கப்பல் "செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும்", அது "இனி ஈரானை நோக்கிச் செல்லவில்லை" என்றும் CENTCOM குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கப் படைகளின் அறிவுறுத்தல்களுக்குக் கப்பல் ஊழியர்கள் இணங்கத் தவறியதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் முற்றுகையை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் செயலிழந்த ஏழாவது கப்பல் மாரிவெக்ஸ் என்றும் CENTCOM கூறியுள்ளது.