உலகம்

ராணி எலிசபெத்துக்கு ஆனதைவிட அதிகம் - ஷின்சோ அபே இறுதிச்சடங்கிற்கு ரூ.94 கோடி செலவு

JustinDurai

ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்குக்காக செலவிடப்படும் தொகை இந்திய மதிப்பில் ரூ.94 கோடி. இது மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்காக செலவிடப்பட்ட தொகையை விட அதிகமாகும்.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே (வயது 67).  இவர் கடந்த ஜூலை 8ஆம் தேதி ஜப்பானின் நாரா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு ஆளானார். அதன்பின், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்நிலையில் ஷின்சோ அபேயின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் தலைநகர் டோக்கியோவில் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி அரசு மரியாதையுடன் நடத்த ஜப்பான் அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஜப்பான் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கின் பாதுகாப்பு பணிக்காக செலவிடப்படும் தொகை சுமார் 1.66 பில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ. 94 கோடி) எனத் தெரிகிறது. இது மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்காக செலவிடப்பட்ட தொகையை விட அதிகமாகும். ராணி எலிசபெத் இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காக மட்டும் ரூ.59 கோடி செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு விவகாரத்தில் அரசு நிதி வீணாக்கப்படுவதாக அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இறுதி சடங்கு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் அருகே ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: ஓயாத வைரஸ் தொல்லை; சீனாவை ஒத்த ரஷ்ய வைரஸ்.. வேக்சினால் எந்த பயனும் இல்லை.. எச்சரிக்கை!