அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில், பங்களாதேஷின் வரலாற்றை, குறிப்பாக நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவாமி லீக்கின் பங்களிப்புடன் தொடர்புடையவற்றை யூனுஸ் அழித்துவிட்டதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், “வங்காளதேச சுதந்திர இயக்கத்தின் அனைத்து அடையாளங்களும் அகற்றப்படுகின்றன. முக்தி ஜோத்தாக்கள் (சுதந்திரப் போராளிகள்) அவமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க அனைத்து மாவட்டங்களிலும் முக்தி ஜோத்தா வளாகங்களை நாங்கள் கட்டினோம். ஆனால் அவை எரிக்கப்படுகின்றன. நீங்கள் (முகமது யூனுஸ்) நெருப்புடன் விளையாடினால், அது உங்களையும் எரித்துவிடும். அதிகார வெறிபிடித்த சுயநலவாதியான யூனுஸ், வெளிநாட்டு சதித்திட்டத்தைத் தீட்டி வெளிநாட்டிலிருந்து செல்வத்தைப் பயன்படுத்தி நாட்டை அழிக்கிறார். BNP (வங்காளதேச தேசியவாதக் கட்சி) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி (அரசியல்) இணைந்து அவாமி லீக் தலைவர்களை துன்புறுத்துவதைச் செய்து வருகின்றன. ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், மருத்துவமனைகள், அனைத்தும் அழிக்கப்படுகின்றன. அவாமி லீக் தலைவர்கள் மீது நாசவேலை செய்பவர்களின் மரணத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. காவல் நிலையங்களை எரித்தவர்கள் மற்றும் போலீசாரை அடித்துக் கொன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. எங்கள் தலைவர்கள் வீட்டில் இருக்க முடியவில்லை, அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. சட்ட அமலாக்கப் பணியாளர்கள் பொது இடத்தில் கொலை செய்யப்பட்டால் இந்த நாடு எப்படி இயங்கும்? யூனுஸுக்கு இது புரியவில்லையா? அல்லது அவர் நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்கிறாரா? இந்த பாசிச பயங்கரவாதி யூனுஸ் அதிகாரப் பசியால் நம் நாட்டை அழித்து வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.