அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக,அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 22 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டதுடன், ஹசீனாவின் செயல் மனித குலத்திற்கே எதிரானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, அவரை வங்கதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு இந்தியாவை கேட்டுக் கொண்டு வருகிறது.
இந்தசூழலில் தான், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தான் டிசம்பரில் நாடு திரும்புவேன் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் வங்கதேசம் திரும்பும்போது அவர்கள் என்னைக் கைது செய்யக்கூடும், அல்லது கொல்லக்கூடச் செய்யலாம். ஆனாலும், நான் அங்கு சென்றே தீருவேன். எனது கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அங்கு கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எனக்கு மரணம் நேர்வதாக இருந்தால், எனது பெற்றோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட, அவர்களின் இரத்தம் சிந்திய எனது சொந்த மண்ணிலேயே அது நிகழ வேண்டும் என நான் விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், தான் தாயகம் திரும்புவது தொடர்பாகத் தற்போதைய வங்கதேச இடைக்கால அரசுடன் எந்தவிதமான தொடர்புகளோ அல்லது பேச்சுவார்த்தைகளோ நடத்தப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.