ஷேக் ஹசீனா PTI
உலகம்

வங்கதேசம் திரும்பும் முயற்சியில் ஷேக் ஹசீனா.. புதிய பாஸ்போர்ட்-க்கு விண்ணப்பம்?

நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தங்கியுள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, மீண்டும் தனது நாட்டிற்குத் திரும்புவதற்காக புதிய பாஸ்போர்ட் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Premkumar S

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இடைக்கால அரசு அமைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அதேநேரத்தில், வன்முறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்துமாறு வங்கதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா 2 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், வங்கதேசம் நான் திரும்பினார் கொல்லப்படலாம். ஆனாலும், நான் டிசம்பரில் நாடு திரும்புவேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்தச்சூழலில் தான், தற்போது அவர் மீண்டும் தனது நாட்டிற்குத் திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காக புதிய பாஸ்போட்டிற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக, டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு தனது வழக்கறிஞர்கள் மூலம் புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தக் கடிதத்தில், ஏற்கனவே ஷேக் ஹசீனாவிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டையை வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்துள்ளது. எனவே, தனது வங்கதேசக் குடியுரிமையின் அடிப்படையில் புதிய ஆவணங்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.