சீனாவிலுள்ள ஒரு ஆட்டுத்தொழுவத்தில் நூற்றுக்கணக்கான செம்மறியாடுகள் 12 நாட்கள் இரவு பகல் விடாமல் வட்டவடிவில் நடந்த விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.
வட சீனாவில் இனெர் மங்கோலியா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போடௌ நகரைச் சேர்ந்தவர் மியோ. இவரது பண்ணையில் மொத்தம் 34 ஆட்டுத்தொழுவங்கள் உள்ளன. ஒவ்வொரு தொழுவத்திலும் நூற்றுக்கணக்கான செம்மறியாடுகள் இருக்கின்றன. அதில் 13வது தொழுவத்திலுள்ள ஆடுகள் திடீரென கடிகாரம் சுழலும் திசையில் வட்டமாக நடக்க ஆரம்பித்துள்ளன. முதலில் சில ஆடுகள் மட்டுமே நடக்கத்தொடங்கி பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து ஆடுகளும் நடக்க தொடங்கியிருக்கிறது. இப்படி நூற்றுக்கணக்கான ஆடுகள் ஒரே சீராக இரவு பகல் பாராமல் 12 நாட்கள் வட்டமடித்துள்ளன. சில செம்மறியாடுகள் நடுவில் ஓய்வெடுக்க, மற்ற ஆடுகள் வட்டமடிக்கின்றன. பின்னர் அவை வரிசையில் இணைந்துகொள்ளும். இப்படி மாறி மாறி ஓய்வெடுத்துக்கொள்ளும் இந்த செம்மறியாடுகள் தங்கள் சுழற்சி நடையை மட்டும் 12 நாட்களாக கைவிடவில்லை.
நவம்பர் 4ஆம் தேதி சிசிடிவியில் பதிவான இந்த காட்சிகளை மியோ வெளியிட்டுள்ளார். இது பார்ப்போருக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சில விலங்குகள் திசைதிருப்பப்பட்டு வட்டமிடத் தொடங்கும் ஒரு நோய் உள்ளது. லிஸ்டீரியோசிஸ் எனப்படும் இந்த நோயானது மூளையின் ஒரு பக்கத்தை வீக்கமடையச் செய்து, இப்படி வித்தியாசமாக நடந்துகொள்ளச் செய்யும். ஒருவேளை லிஸ்டீரொயோசிஸ் வியாதியானது அந்த செம்மறியாடுகளை தாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது என்ன பிரச்னை என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இதுவரை முடிவுக்கு வரவில்லை. கடந்த ஆண்டு, கிழக்கு சசெக்ஸில் உள்ள செம்மறியாடுகள் இதேபோன்று வட்ட வடிவில் நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.