பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் எக்ஸ் தளம்
உலகம்

கடும் நிதி நெருக்கடி.. விமானங்களை விற்கும் பாகிஸ்தான்!

2025ஆம் ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை (PIA) விற்க பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prakash J

அண்டை நாடான பாகிஸ்தான், கடுமையான நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதைச் சமாளிக்க உலக நாடுகளிடமும், சர்வதேச நிதியகத்திடமும் கடன் பெற்று வருகிறது. இந்த நிலையில், நஷ்டத்தில் இயங்கும் தேசிய விமான நிறுவனத்தை தனியார் மயமாக்க கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை (PIA) விற்க பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கடுமையான நிதி சிக்கலில் தவித்து வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம், 7 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாதநிலையில், இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதற்கிடையே, பாகிஸ்தான் ஏர்லைன்சை கடந்த ஆண்டு விற்பனை செய்ய நடந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் 7 பில்லியன் டாலர் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டபடி, நிதி திரட்டவும், பணத்தை வீணடிக்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை சீர்திருத்தவும், தேசிய விமான நிறுவனத்தின் 51–100% பங்குகளை விற்க பாகிஸ்தான் முயன்று வருகிறது.

இதன் பங்குகளை வாங்குவதற்கு வணிகக் குழுக்கள் மற்றும் இராணுவ ஆதரவு நிறுவனம் உட்பட நான்கு தரப்பினருக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் ஏலம் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடப்பாண்டின் இறுதியில், அதாவது செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.