US Google Gemeni
உலகம்

இந்தியாவுக்கே டஃப் கொடுக்கும் அமெரிக்கா.. பின்னணியில் மிகப்பெரிய காரணம்!

அமெரிக்கா முழுவதும், பெருகிவரும் பல நகரங்களும் பிராந்தியங்களும், புதிய குடியிருப்பாளர்களை ஈர்ப்பதற்காக, ரொக்கப் பணம், வரிச் சலுகை, இலவச நிலம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்கிவருகின்றன.

Prakash J

அமெரிக்காவுக்குச் செல்வதே பலருக்கும் பெரிய கனவாக இருக்கும் நிலையில், இன்னும் அங்கேயே நிரந்தரமாகத் தங்குவது என்பதென்றால், அதைவிடப் பேரானந்தம் என்ன இருக்கப்போகிறது? அதற்காக, அமெரிக்காவின் சில பகுதிகளே கவர்ச்சிகரமான நிதியுதவிகளை அறிவித்திருப்பது மக்களை ஆச்சர்யத்திலும் ஆனந்தத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அதிலும் தமிழ்நாட்டில் சொல்லவே வேண்டாம்.. இலவச பட்டா பதிவு, ஒரு மனை வாங்கினால் இன்னொரு மனை இலவசம், சுலபத் தவணை, கடன் வசதி.. எனப் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை நிலம் வாங்கவைப்பதில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கைதேர்ந்தவர்களாக விளங்கி வருகின்றன. இந்தச் சூழலில்தான், இதேபோன்ற அறிவிப்பை அமெரிக்காவும் செயலில் காட்டியுள்ளது. அமெரிக்கா முழுவதும், பெருகிவரும் பல நகரங்களும் பிராந்தியங்களும், புதிய குடியிருப்பாளர்களை ஈர்ப்பதற்காக, ரொக்கப் பணம், வரிச் சலுகை, இலவச நிலம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்கிவருகின்றன. தொலைதூரப் பணியாளர்கள் மற்றும் குடும்பங்களைக் இலக்காகக் கொண்டு இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Texarkana

தங்கள் பகுதிகளின் மக்கள்தொகையை உயர்த்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், திறமையான பணியாளர்களின் தேவையைப் பூர்த்திசெய்யவும் இந்த அரிய திட்டத்தை அப்பகுதிகள் கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், டெக்ஸார்கானா (Texarkana) பகுதி டாலர் 18,900 வரையிலான சலுகைகளை வழங்குகிறது. இதில் டாலர் 5,000 ரொக்கத்துடன் வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது. அடுத்து, துல்சா (Tulsa) பகுதி 10,000 டாலர் ரொக்க மானியத்தையும் உள்ளூரில் கூட்டுப் பணி இடத்தையும் வழங்குகிறது. அடுத்து ஹட்சின்சன் (Hutchinson) பகுதி டாலர் 5,000 ரொக்கத்தொகையையும், வீடு வாங்கினால் கூடுதலாக டாலர் 5,000 தொகையையும் வழங்குகிறது.

Tulsa

படு்கா (Paducah) பகுதி, இரண்டு ஆண்டுகளில் பிரித்து வழங்கப்படும் 5,000 டாலர் இடமாற்ற ஊக்கத்தொகை, 1% முதல் 2% வரையிலான ஊதிய வரி விலக்கு மற்றும் 12 மாதங்களுக்கு இலவச இணைய வசதி ஆகியவற்றை வழங்குகிறது. இறுதியாக மேற்கு மெம்பிஸ் (West Memphis) பகுதி, ’ஸ்டார்ட் ஃப்ரெஷ்’ (Start Fresh) என்ற திட்டத்தின் விருந்தோம்பல் சலுகைகளுடன், வாடகைக்கு வசிப்பவர்களுக்கு டாலர் 5,000 அல்லது வீடு வாங்குபவர்களுக்கு டாலர்10,000 வழங்கி மகிழ்விக்கிறது. இப்படி, அமெரிக்காவின் பரபரப்பான நகரங்கள், மக்களுக்கு ஆசைகாட்டி வரவேற்கும் நிலையில், அதன் பின்னணியில் பல்வேறு நிபந்தனைகள் இருக்கும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.