தைவான்
தைவான் முகநூல்
உலகம்

அடுத்தடுத்து 80 முறை நிலநடுக்கம்... அச்சத்தின் உச்சத்தில் தைவான் மக்கள்!

ஜெனிட்டா ரோஸ்லின்

கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடுதான் தைவான். இங்கு ஹீலைன் மாகாணத்தை மையமாக கொண்டு நேற்று இரவு முதல் (ஏப்ரல் 22) இன்று (ஏப்ரல் 23) அதிகாலை வரை அடுத்தடுத்து 80 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் தொடர் நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கிய வண்ணம் இருந்துள்ளன. இதனால் மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். ஒரு சில பகுதிகளில் வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன. இதனால், அதில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது ஏன்?

பூமியின் 2 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் தைவான் அமைந்துள்ளதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

தைவானை பொறுத்தவரை 1999 ஆம் ஆண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. அதுவே தற்போது வரை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால், சுமார் 2000 யிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக, தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்றால் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி 7.2 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதுதான். இதனால், அப்பகுதியில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.