Serbia Reuters
உலகம்

தெருவில் தொடங்கிய போராட்டம்.. புரட்சி செய்து ஆட்சியை பிடித்த மாணவர்கள்! கொண்டாடும் மக்கள்

மாணவர்களின் போராட்டம்: செர்பியாவில் புதிய அரசியல் யுகம்!

PT WEB

செர்பியாவில் மாணவர்கள் வழிநடத்திய 'மாணவர் பட்டியல்' (Students List) இயக்கம், 2026 தேர்தலில் 52.7% வாக்குகள் பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஊழல் மற்றும் அலட்சியத்துக்கு எதிராக தொடங்கிய போராட்டம், மக்கள் ஆதரவைப் பெற்று வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியது. முன்னாள் அதிபர் வுசிக் தோல்வியை ஒப்புக்கொண்டார், மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் - M.மீரா

செர்பியா நாட்டில் அக்டோபர் 25, 2026 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டை ஆட்சி செய்து வந்த அதிபர் அலெக்சாண்டர் வுசிக் (Aleksandar Vučić) தலைமையிலான 'செர்பிய முற்போக்குக் கட்சி' (SNS) பலத்த தோல்வியைச் சந்தித்துள்ளது. மாணவர்களால் வழிநடத்தப்பட்ட 'மாணவர் பட்டியல்' (Students List) என்ற மாற்று இயக்கம் இந்தத் தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

Serbia protests

2024ஆம் ஆண்டில் நோவி சாட் (Novi Sad) ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு அரசாங்கத்தின் ஊழலும், அலட்சியமுமே காரணம் என்று குற்றம் சாட்டி, மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து அமைதியான போராட்டங்களை நடத்தி வந்தனர். மக்கள் மத்தியில் எழுந்த பெரும் கொந்தளிப்பைத் தொடர்ந்து, அதிபர் வுசிக் செப்டம்பர் 2026-இல் நாடாளுமன்றத்தைக் கலைத்து இந்தத் திடீர்த் தேர்தலை அறிவித்தார்.

இத்தேர்தலில் கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிக அளவாக 65% வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, மாணவர் ஆதரவு பெற்ற 'மாணவர் பட்டியல்' கூட்டணி 52.7% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. 250 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் சுமார் 140 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், ஆளும் வுசிக் தலைமையிலான கூட்டணி 39.2% வாக்குகளைப் பெற்று 103 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை இழந்துள்ளது.

Serbia Election

தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தனது தோல்வியை ஒப்புக்கொண்ட அலெக்சாண்டர் வுசிக், மாணவர் அமைப்பின் வெற்றியைப் பகிரங்கமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானவுடன் தலைநகர் பெல்கிரேடு (Belgrade) உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி, பட்டாசுகள் வெடித்தும் தேசியக் கொடிகளை ஏந்தியும் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

ஊழல், சர்வாதிகாரப் போக்கு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக ஐரோப்பாவில் ஒரு மாணவர் இயக்கம் ஜனநாயக ரீதியில் தேர்தலைச் சந்தித்து, நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தவர்களை வீழ்த்திப் புதிய அரசியல் யுகத்தைத் தொடங்கியிருப்பது உலக அளவில் ஒரு மிக முக்கிய வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது