US secret Operation  AI -PT
உலகம்

கச்சா எண்ணெய் | அமெரிக்காவின் ரகசிய ஆபரேஷன்.. ஹார்முஸ் வழியாக கடத்தல்!

ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் எண்ணெய்யைக் கொண்டு செல்ல அமெரிக்கா ரகசியமாக உதவியதாக டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

PT WEB

மத்திய கிழக்குப் போருக்குப் பிறகு ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடிய நிலையில், உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதைச் சமாளிக்க அமெரிக்க ராணுவம் ரகசிய ஆபரேஷன் மூலம் 100 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ஹார்முஸ் வழியாக கடத்தி திறந்த சந்தைக்கு கொண்டுசென்றதாக டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

செய்தியாளர்; M. மீரா

பிப்ரவரி 28 அன்று மத்திய கிழக்குப் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பாரசீக வளைகுடாவையும் அரேபியப் பகுதியையும் இணைக்கும் ஹார்முஸ் நீர்வழிப் பாதையை ஈரான் முழுவதுமாக மூடியது. உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாகவே செல்கிறது. ஈரானால் மூடப்பட்டிருக்கும் ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் கடற்படையும் முற்றுகையிட்டுள்ளது,

hormuz

இந்நிலையில் அமெரிக்கப் படைகள் சுமார் 100 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரகசியமாக எடுத்துச் சென்றதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்குத் தெரியாமல் இந்த ரகசிய நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ரகசிய நடவடிக்கைக் குறித்து ட்ரூத் சோஷியல் பக்கத்தில் (Truth Social) ட்ரம்ப் பதிவிட்டதாவது: "கடந்த மாதம், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் பிற வணிகக் கப்பல்களுக்கு உதவும் வகையில் ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ராணுவத்திற்கு நான் உத்தரவிட்டேன். இந்த முயற்சியின் விளைவாக, 100 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெய் இந்த நீரிணை வழியாகச் சென்று திறந்த சந்தையை அடைந்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நடவடிக்கை குறித்து ஈரானுக்குத் தெரியாது” என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில், விளக்குகள் ஏதுமின்றி சுமார் 22 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் ஹார்முஸ் நீரிணை வழியாக வெளியேற்றியுள்ளன. ஈரானிடம் சிக்குவதைத் தவிர்ப்பதற்காக, அந்த 22 கப்பல்களும் இரவில் அவற்றின் விளக்குகள் அணைக்கப்பட்டும், டிரான்ஸ்பாண்டர்கள் செயலிழக்கச் செய்தும் நகர்த்தப்பட்டதாக ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். அமெரிக்கப் படைகள் ஈரானின் ரேடார் திறன்களைச் செயலிழக்கச் செய்ததாலேயே அந்தக் கப்பல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார். அமெரிக்காவின் இந்த அதிரடி உத்தியால் மட்டுமே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கும் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில் அது பேரலுக்கு 200 டாலரைத் தாண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.