அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஈரானில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, முதல் நாளிலேயே கொல்லப்பட்டார். தொடர்ந்து மத்திய கிழக்கில் தாக்குதல் நடைபெற்ற நிலையில், தற்போது அவருடைய இறுதிச்சடங்கு அரசு முறைப்படி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 4ஆம் தேதி ஈரானின் தெஹ்ரானில் அதற்கான நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஊர்வலங்கள் மற்றும் புனித தலங்களில் தரிசனத்துடன் நாளை (ஜூலை 9) அவரது உடல் சொந்த ஊரான மஷ்ஹத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
இந்த நிலையில், "அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வைச் சீர்குலைக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டம் தீட்டியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியா டுடே ஊடகத்திற்கு அளிக்கப்பட்ட பேட்டி ஒன்றில், தெஹ்ரான் துணை மேயர் ஹமித்ரெசா குலாம்சாதே தெரிவித்துள்ளார். அதில், “அமெரிக்காவும் இஸ்ரேலும் அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளைச் சீர்குலைக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பெரிய கூட்டங்களையும் சர்வதேச விருந்தினர்களின் வருகையையும் கண்டபிறகு, அவர்கள் இதிலிருந்து பின்வாங்கினர்" என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இறுதிச்சடங்கு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், அஞ்சலி செலுத்த பெருந்திரளான மக்கள் கூடியுள்ளதால் இந்நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய வழக்கப்படி, மரணமடைந்தவுடன் உடல் உடனடியாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றாலும், தற்போதைய போர்ச் சூழல் மற்றும் தேசத்தின் பலத்தை உலகிற்குப் பறைசாற்றும் நோக்கோடும் இந்த ஆறு நாள் விரிவான இறுதிச்சடங்கு ஊர்வலத்தை ஈரானிய அரசு ஒருங்கிணைத்துள்ளது.
அதன்படி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற அலி காமேனியின் இறுதி ஊர்வலத்தில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த 6 நாள் நிகழ்வுகளிலும் சேர்த்து சுமார் 3 கோடி மக்கள்வரை அஞ்சலி செலுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2020-இல் நடைபெற்ற ஜெனரல் காசிம் சுலைமானியின் இறுதிச்சடங்கு கூட்டத்தை விடவும் மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.