cuba  AI
உலகம்

ஈரானைப் பின்பற்றும் கியூபா.. அமெரிக்காவுக்குப் புதிய சவால்!

அமெரிக்காவின் சொத்துகளைத் தாக்க ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து கியூபாவின் இராணுவத்திற்குள் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவிக்கிறது.

PT WEB

2026 ஜனவரியில் ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ் (Operation Absolute Resolve) என்ற பெயரில் அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியது. அப்போது, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டனர்.

Maduro's capture

வெனிசுலாவும் கியூபாவும் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்த நிலையில், கியூபாவின் எரிவாயு தேவையை வெனிசுலாவே பூர்த்தி செய்துவந்தது. ஆனால், வெனிசுலா அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு வந்தபின்னர், கியூபா நாடு தழுவிய எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டதால் பெரும் மற்றும் நீண்டகால மின்வெட்டுகளுக்கு வழிவகுத்ததோடு, ஹவானாவில் பொதுப் போராட்டங்களையும் தூண்டியது.

வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, அதிபர் டொனால்டு ட்ரம்ப், கியூபாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் எந்தவொரு நாட்டின் மீதும் வரிகள் மற்றும் தடைகளை விதிப்பதாக அச்சுறுத்தி, கடுமையான பொருளாதார அழுத்தத்தை விதித்தார்.

Guantanamo Bay Naval Base

கியூப அதிபர் மிகுவல் தியாஸ்-கானெல் (Miguel Díaz-Canel) பதவி விலகும்படி கட்டாயப்படுத்துவதே இந்த எரிசக்தி நெருக்கடியின் நோக்கம் என்று அமெரிக்கா வெளிப்படையாகக் கூறியது. மேலும், அரசாங்கம் பணியவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனையடுத்து அமெரிக்கா எங்கள் மீது படையெடுத்தால் எங்கள் உயிரையும் கொடுத்து தாய்நாட்டை காப்போம் என கியூபா அதிபர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து கியூபா நூற்றுக்கணக்கான இராணுவ ட்ரோன்களை வாங்கியுள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் வெளியாகியுள்ளது. இந்த செயல் அமெரிக்காவுக்கு கவலையளித்துள்ளது. கியூபாவில், குவாண்டநாமோ பே (Guantanamo Bay)-இல் இருக்கும் அமெரிக்க கடற்படைத் தளம், அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மற்றும் கீ வெஸ்ட் அருகே உள்ள இலக்குகளுக்கு எதிராக ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்காக சாத்தியமான திட்டங்கள் குறித்து கியூபா அதிகாரிகள் சமீபத்தில் விவாதித்துள்ளதாக ஆக்சியோஸ் (Axios) செய்தி வெளியிட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு முதல் கியூபா பல்வேறு திறன்களைக் கொண்ட 300-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளதாகவும், அவற்றை தீவு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் நிலைநிறுத்தியுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்குள், ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் இராணுவ உபகரணங்களை கியூபா கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

US warships near Venezuela

மேலும், உக்ரைனில் ஆயிரக்கணக்கான கியூப வீரர்கள் ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்டதாகவும், அங்கு அவர்கள் நவீன ஆளில்லா விமானப் போர் தந்திரங்களைக் கற்றுக்கொண்டதாகவும் அவர்கள் ஈரானிய போர் தந்திரங்களைப் பற்றியும் கற்றுக்கொள்கிறார்கள். இது முழுமையான திட்டமிடல் என்றும் கியூபா அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் வளைகுடா பதற்றங்களின்போது ஈரான் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, ஆளில்லா விமானப் போர் தந்திரங்கள் அமெரிக்காவை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.