உலகம்

ட்ரம்ப் - கிம் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமையுமா ?

ட்ரம்ப் - கிம் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமையுமா ?

webteam

வியட்நாம் தலைநகர் ஹனாயில் நாளை நடைபெற உள்ள ட்ரம்ப் - கிம் இடையிலான இரண்டாவது சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமையுமா என்று ஒட்டுமொத்த உலக நாடுகளும் உற்று நோக்குகின்றன.

எதிரெதிர் துருவங்களாக இருந்த அமெரிக்காவும், வடகொரியாவும் திடீரென தோளோடு, தோள் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு அதிரடியான அதிசய நிகழ்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. குறிப்பாக சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி முதல் முறையாக நிகழ்ந்த வரலாற்று சந்திப்பு, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தியது. தவிர, இந்த சந்திப்புக்குப் பின் தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத சோதனைகளையும் வடகொரியா அறவே நிறுத்திக் கொண்டதும், உலக நாடுகளை அதிசயிக்க வைத்துள்ளது. தனது நாட்டில் இருந்த அணு ஆயுத சோதனை கூடங்களையும் அழித்து, அதற்கான காணொலியையும் வெளியிட்டது வடகொரியா.

எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்டால் மட்டுமே, வடகொரியா மீதான தடைகளை விலக்கிக் கொள்ள நேரிடும் என ‌திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது அமெரிக்கா. இதன் காரணமாக, இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், இரண்டாவது முறையாக சந்தித்து பேசவுள்ளனர்.

வியட்நாமில் நாளை இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கி இரு நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. பல்வேறு தடைகளால் முன்னேற்றம் இல்லாமல் துவண்டு போயிருப்பதால், இந்த சந்திப்பின்போது, பொருளாதார தடைகளை நீக்கும்படி, அமெரிக்க அதிபரிடம், கிம் ஜாங் உன் மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிடவில்லை என ஐ.நா. ரகசிய அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்திருந்ததால், பேச்சுவார்த்தையின் போது இந்த விவகாரம் பெரிதாக எதிரொலிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

அதே சமயம், வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும், அதற்காக காலக்கெடுவை விதித்து அந்த நாட்டுக்கு நெருக்கடி தர விரும்பவில்லை என்றும் அண்மையில் ட்ரம்ப் தெரிவித்திருப்பதால், வியட்நாம் பேச்சுவார்த்தையின்போது இந்த விவகாரத்தை அவர் பெரிதாக எழுப்ப மாட்டார் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இந்தச் சந்திப்பின்போது கிம் ஜாங் உன் தடைகளை நீக்கும்படி வலியுறுத்தினாலும், பிரதிபலனாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வடகொரியாவுக்கான சில தடைகளில் தளர்வு வழங்கவும் அமெரிக்கா முடிவெடுக்கலாம் என்ற கருத்தும் அரசியல் நோக்கர்களால் முன் வைக்கப்படுகிறது. பொருளாதார தடை, அணு ஆயுதங்களை கைவிடுதல் என சில விவகாரங்களில் இரு நாடுகளும் முக்கிய நகர்த்தலை முன் வைத்தால் மட்டுமே இந்த இரண்டாவது சந்திப்பு வெற்றிகரமாக அமையும் என்றும், இல்லாவிட்டால், இது வெறும் சம்பிரதாயமான சந்திப்பாகவே கருதப்படும் என்ற விமர்சனங்‌ளும் தற்போது எழத் தொடங்கி இருக்கின்றன.