அதிசயங்களும் ஆச்சரியங்களும் இந்த உலகத்தில் நிரம்பி இருக்கிறது. அப்படியான ஒரு ஆச்சரியமான பொருளொன்று, ஸ்காட்டிஷ் கலங்கரை விளக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது என்ன? பார்க்கலாம்...
‘கில்லி’ திரைப்படத்தில் விஜய் கலங்கரை விளக்கத்தின் உச்சியில், தன் நண்பர்களுடன் சேர்ந்து தன் பெயர் உட்பட அனைவரின் பெயரையும் எழுதி வைப்பார். அதற்கு காரணமாக, ‘எங்களையெல்லாம் பின்னால் வரும் சந்ததிகள் படித்து தெரிந்து கொள்வார்கள்’ என ஹீரோயினிடம் சொல்வார். இது நகைச்சுவை காட்சியாக இருந்தாலும், நிஜத்திலும் அது போன்ற சம்பவம் ஒன்று சுமார் 132 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அப்படி எழுதப்பட்ட பெயர்கள் ஸ்காட்டிஷ் கலங்கரை விளக்கத்தில் கிடைத்துள்ளது.
ஸ்காட்டிஷ் கலங்கரை விளக்கத்தில் சுமார் 132 ஆண்டுகளுக்கு (1892-ல்) முன்பு உபயோகப்படுத்தப்பட்ட ஒரு காற்றுப்புகா பாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே, ஸ்காட்டிஷ் கலங்கரை விளக்கத்தை கட்டிய பொறியாளர்களின் பெயர்கள் மற்றும் அந்த கலங்கரை விளக்கத்தை காவல்காத்தவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.
இந்த பாட்டிலானது கோர்ஸ்வால் கலங்கரை விளக்கத்தின் சுவர்களுக்குள் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. அந்த பாட்டிலை கைப்பற்றியவர்கள் அதனுள் இருந்த பேப்பரை எடுத்துப் பார்க்கையில், அந்த எழுத்தானது குயில் மையால் எழுதப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அதை பத்திரமாக சுவர்களுக்கு இடையில் யாரோ மறைத்து வைத்திருந்ததாகவும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
எதற்காக இவர்கள் இந்த பெயரை எழுதி பாட்டினினுள் அடைத்து வைத்துள்ளனர், அதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.