ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கருத்து கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கி ஸ்காட் மோரிசன் மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கெனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வந்தார்.
இந்நிலையில் 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சிக்கு 48 சதவீதமும்,எதிர்க்கட்சிக்கு 52 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என முடிவுகள் வெளியாகின. ஆனால் கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கி மோரிசன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் தலைநகர் கேன்பெராவில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மோரிசன் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் துணை பிரதமர் மைக்கேல் மெக்கார்மெக்கும் பதவியேற்றார். பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் ஆஸ்திரேலியாவுக்கான பிரதிநிதி பீட்டர் காஸ்குரோவ் இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 7 பெண் அமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியில் பதவியேற்றனர். ஆஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் பெண் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.