Heat wave FB
உலகம்

ஐரோப்பிய நாடுகளை உலுக்கும் வெப்பஅலை.. அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்.. பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

வெப்ப அலைவீச்சை சமாளிக்க இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வெர வேண்டும் என தடை விதிக்கப்பட்டது.

Vaijayanthi S

ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலைக்கு 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. காலநிலை மாற்றம் இந்த வெப்ப அலையை தீவிரப்படுத்தி இறப்பு எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பா நாடுகளில் தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது.. இதனால் அங்கு கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் முதல் சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இயல்பை காட்டிலும் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. இதனால் உயிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. வெப்ப அலைவீச்சை சமாளிக்க இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான வெப்ப அலையால் ஐரோப்பிய நாடுகள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வெப்ப அலையின் தாக்கம் குறித்து லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் டாக்டர் பென் கிளார்க் கூறுகையில், தற்போது வீசி வரும் வெப்ப அலை எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது என்றும் இது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு விரைவான அறிவியல் பகுப்பாய்வின்படி, கடந்த வாரம் முடிவடைந்த கடுமையான வெப்ப அலையின் போது 12 ஐரோப்பிய நகரங்களில் சுமார் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு ஜூலை 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த 10 நாட்களை இலக்காகக் கொண்டது, அந்த நாட்களில் மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டன, ஸ்பெயினில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை (104°F) தாண்டியது. அதேபோலவே பிரான்சிலும் காட்டுத்தீ அதிகரித்து வருகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் இறந்ததாக மதிப்பிடப்பட்ட 2,300 பேரில், 1,500 இறப்புகள் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையவை, இது வெப்ப அலையை மேலும் கடுமையானதாக மாற்றியது என்று லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பள்ளியின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், காலநிலை மாற்றம் இந்த வெப்ப அலையை 1 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாக்கியது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆராய்ச்சியாளர்கள் வெப்பத்திற்கும், தினசரி இறப்புகளுக்கும் இடையிலான தொடர்பைப் பயன்படுத்தி இந்த இறப்புகளைக் கணக்கிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்ப அலையின் தாக்கங்கள் ஐரோப்பாவின் பல நகரங்களில் உணரப்பட்டன, குறிப்பாக பார்சிலோனா, மாட்ரிட், லண்டன் மற்றும் மிலன் போன்ற நகரங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் மேற்கு ஐரோப்பாவில் ஜூன் மாதத்தில்தான் மிகவும் அதிகமான வெப்பத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்..

heat wave

"வெப்பமயமாதல் உலகில், வெப்ப அலைகள் அடிக்கடி நிகழவும், அது தீவிரமாக மாறவும், ஐரோப்பா முழுவதும் அதிகமான மக்களைப் பாதிக்கவும் வாய்ப்புள்ளது" என்று ஐரோப்பாவின் கோப்பர்நிக்கஸின் காலநிலைக்கான தலைவர் சமந்தா பர்கெஸ் கூறினார். 2022 ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் வெப்ப அலைகளால் 61,000 பேர் இறந்திருக்கலாம் என்று ஐரோப்பிய சுகாதார நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் 2023 ஆம் ஆண்டில் தெரிவித்தனர்,

அத்துடன் தற்போது நடந்த புதிய ஆராய்ச்சியின்படி, நாடுகளின் வெப்பத் தயார்நிலை முயற்சிகள் மிகவும் குறைந்து வருகின்றன என்பதைக் குறிக்கிறது. மேலும் புவி வெப்பமயமாதல், அதிகரித்து வரும் தொழில்புரட்சி, புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெப்ப அலைவீச்சு உயர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்..

காரணங்கள்..:

1. அதிக காற்றழுத்த மண்டலங்கள் (High Pressure Systems)

2. உலக வெப்பமயமாதல் (Global Warming)

3. நகர மண்டல வெப்ப தீவு விளைவு (Urban Heat Island Effect)

4. காற்றின் வழிமாற்றம் (Atmospheric Circulation Patterns)

5. காடுத்தீ (Forest Fires)

6. மனித செயற்பாடுகள் (நிலக்கரி எரிப்பது உள்ளிட்டவை)

மேலும் ஐரோப்பிய மக்கள் இந்த வெப்ப அலைவீச்சை சமாளிக்க இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வெர வேண்டும் என தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக பிரான்சின் மெட்டியோ நகரம், ஜெர்மனியின் முனிச் ஆகிய நகரங்களில் ரெட் லைட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. அதனால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன..

மேலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக வளாகங்கள் பகுதி நேரமாகவே செயல்பட்டு வருகின்றன. அத்துடன் பொது மக்களுக்காக நகரில் உள்ள பூங்காக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தற்காலிக தண்ணீர் குழாய்கள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன..

berlin - heat wave