இலங்கை தாக்குதலில் படுகாயமடைந்து, சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பள்ளி திரும்பிய மாணவருக்கு சக மாணவர்களும், ஆசியர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றனர். உலக நாடுகளையே உலுக்கிய பயங்கரவாத தாக்குதலால் நிலைகுலைந்த இலங்கை, தற்போது தான் மெல்ல மீண்டு வருகிறது. தாக்குதலுக்குப் பிறகு அதிரடி சோதனைகள், பலத்த பாதுகாப்பு என இலங்கை அரசு தீவிர கண்காணிப்பிலேயே இருக்கிறது.
தாக்குதல் நடைபெற்று கிட்டத்தட்ட 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தாக்குதலில் காயமடைந்தவர்கள் பலரும் சிகிச்சைக்குப் பிறகு தங்களது வழக்கமான பணிகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்து சிகிச்சைப் பெற்று மீண்ட 6ம் வகுப்பு மாணவன் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளான். அவனுக்கு பள்ளி மாணவர்களும், ஆசியர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.
6ம் வகுப்பு படிக்கும் மாணவனான ஷெனான் என்ற மாணவன் இலங்கை தாக்குதலில் சிக்கினான். அவனது முகத்தின் வலது பக்கம், வலது கை ஆகியவை கடுமையாக காயமடைந்தது. இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பிய அவனுக்கு சக மாணவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பூங்கொத்து வழங்கியும், கேக் வெட்டியும் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தாக்குதலில் காயமடைந்த மாணவருக்குப் பள்ளி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.