டெக்சாஸ் மாகாணத்தில் புயலால் மூடப்பட்ட ரசாயன ஆலையில், மின்சாரம் இல்லாததால் ரசாயனம் வெப்பம் அடைந்து வெடித்துச் சிதறின.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹூஸ்டன் நகரம் அருகே இருக்கும் ரசாயன ஆலை அடுத்து வரும் நாட்களில் எந்த சமயத்திலும் வெடித்துச் சிதறலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆலையில் வைக்கப்பட்டிருந்த ரசாயன மூலப் பொருட்கள் குளிர்ச்சியை இழந்து வெப்பம் அடைந்து வருவதாகவும், இதன் காரணமாக எந்த நேரத்திலும் அது வெடித்துச் சிதறலாம் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த விபத்தை தடுத்து நிறுத்தவும் முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மின்சாரம் இல்லாததால் ரசாயனங்கள் வெப்பம் அடைந்து வெடித்துச் சிதறின. ரசாயன ஆலை தீப்பிடித்து எரிந்ததால் 40 அடி உயரத்துக்கு அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. முன்பே எச்சரிக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியில் வாழ்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். எனினும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.