செய்தியாளர் - கார்த்திகேயன்
புதையலை கண்டறியும் கதைகள் என்றாலே மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கும். புதையல் எங்கு உள்ளது? அதற்கான குறிப்புகள் என்ன? அந்த புதையலை கண்டறியும் பயணத்தில் நடக்கும் சாகசங்கள் குறித்து, இன்னும் எத்தனை கதைகள் எழுதினாலும், மக்கள் மத்தியில் ஆர்வம் குறையாது. இது கதைகளில் தான் நடக்கும்? நிஜ வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடப்பதற்கு வாய்பபுகள் இல்லை என்று சிலர் நம்பலாம். ஆனால், அவர்களது நம்பிக்கையை தூள் தூளாக்கும் வகையிலான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
82 ஆண்டு கால அந்த மர்ம புதையலை, தற்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அதாவது, இரண்டாம் உலக போர் உச்சத்தில் இருந்த சமயத்தில், பிரிட்டிஸ் நாட்டை சேர்ந்த எஸ்.எஸ்.சிட்டி ஆஃப் கைரோ என்ற நீராவிக் வணிகக் கப்பல், இந்தியாவின் மும்பை துறைமுகத்தில் இருந்து, இங்கிலாந்துக்கு சென்றுக் கொண்டிருந்தது. இந்த கப்பலில் பயணிகளுடன் சேர்த்து, சவுதி அரேபியாவின் 16 ஆயிரம் கிலோ எடையுள்ள வெள்ளி நாணயங்களும், பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பல் சென்றபோது, எதிரி நாடான ஜெர்மனியின் கப்பற் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் ஏவுகணைகளை ஏவி ஜெர்மனி நடத்திய தாக்குதலில், பிரிட்டிஷ் நாட்டின் கப்பல் நிலைகுலைந்து இரண்டு துண்டாக பிளந்தது. பின்னர், டன் கணக்கிலான வெள்ளி நாணயங்களோடு, 16 ஆயிரத்து 896 அடி ஆழத்தில் கப்பல் மூழ்கியது. இது டைட்டானிக் கப்பல் மூழ்கியதை விட ஆழம் என்றும் சொல்லப்படுகிறது. பல ஆண்டுகள் மர்மமாகவே இருந்த இந்த புதையலை மீட்பதற்கு, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டன.
இறுதியில், புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனமான ஆர்காஸ், இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. அதிநவீன ரோபோடிக் கருவிகள், ரேடார் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, 5 கிலோ மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் வெள்ளி நாணயங்கள் இருந்த இடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். பின்னர், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, அந்த 16 டன் எடையுள்ள வெள்ளி நாணயங்கள், வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது. நவீன கடல்சார் வரலாற்றில் இது மிகக் கடினமான மற்றும் வெற்றிகரமான ஆழ்கடல் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.