கொரோனாவுக்கு சவுதியின் மெக்கா நகரில் இரண்டாவது நபர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனாவால் உலக நாடுகள் இழப்பை சந்தித்து வருகின்றன. ஸ்பெயின் இத்தாலி ஆகிய நாடுகளில் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்து வருகிறார்கள். இந்த கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டறிய உலக நாடுகள் பல தீவிரமாக இயங்கி வருகின்றன.
இதனிடையே கொரோனாவுக்கு சவுதியின் மெக்கா நகரில் இரண்டாவது நபர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு இரண்டாவது உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதை அடுத்து, தலைநகர் ரியாத் மற்றும் புனித நகரங்களான மெக்கா, மதினாவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நகரங்களிலும் பொதுமக்கள் நுழையவோ, வெளியேறவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒட்டுமொத்தமாக 900 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சவுதி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முதலில் 11 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் நோய் தொடர்ந்து பரவி வருவதை அடுத்து, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக சவுதி அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். மேலும், ஊரடங்கின்போது வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு 10 ஆயிரம் சவுதி ரியால் அபராதமாகவும் தொடர்ந்து விதிகளை மீறுவோருக்கு சிறை தண்டன விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.