உலகம்

சவுதி அரச குடும்பத்தை சேர்ந்த இருவர் பணி நீக்கம் : மன்னர் சல்மான் அதிரடி

webteam

ஏமனுடன் சண்டையிடும் சவுதியின் கூட்டுப்படை கமாண்டராக இருந்த ஃபாகத் உட்பட அரச குடும்பத்தை சேர்ந்த இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சவுதியின் பாதுகாப்பு அமைச்சகத்தில் முறையற்ற பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஏமனுடன் சண்டையிடும் கூட்டுப் படையின் தளபதியும் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசருமான ஃபாகத் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஃபாகத் மகனும் துணை ஆளுநராகவும் இருந்த அப்துல்லாசீஸ் என்பவரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்த 4 உயர் அதிகாரிகளும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம்தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சவுதி மன்னர் சல்மான் அரசு குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பது இது முதல்முறையல்ல.

ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு அரசு குடும்பத்தை சேர்ந்த பலரை பிடித்து வைத்திருந்து பின்னர் 100 பில்லியனுக்கும் மேலான அமெரிக்க டாலரை பிணைத் தொகையாக வாங்கிக்கொண்டு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.