ஹார்முஸ் Reuters
உலகம்

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தம்.. சவுதி நிறுவனம் முடிவு!! காரணம் என்ன?

சவுதி அரேபியாவின் 'அராம்கோ' நிறுவனம், இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.

Premkumar S

சவுதி அரேபியா மற்றும் ஹவுதிக்கள் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதியின்ன் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோ, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது, சவுதி அரேபியாவின் கிழக்கு - மேற்கு எண்ணெய் குழாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

ஹவுதி

சுமார் 1,200 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குழாய், சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு கடற்கரை பகுதிக்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தில் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த குழாய் சவுதி அரேபியாவுக்கு மாற்று விநியோக பாதையாக இருந்தது. ஆனால், சமீபத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து இந்த குழாய் மூடப்பட்டுள்ளது.

மேலும், பாப் அல் மந்தப் நீரிணைப் பகுதியில் உள்ள 'மயோன்' தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளதால் சவுதியின் கடல்வழிப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாகத்தான், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய் விநியோகத்தையும் அராம்கோ நிறுவனம் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் அராம்கோவின் பங்கு குறிப்பிடத்தக்கது. போருக்குப் பிறகு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 9 சதவீதத்தை அராம்கோ வழங்கி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அராம்கோ

ஏற்கனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டி வருவதுடன், கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்களும் அதிகரித்துள்ளன. இதனால், சவுதி எண்ணெய்க்கு பதிலாக வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கும்போது, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படலாம். அதே நேரத்தில், சவுதி அரேபியா சில கச்சா எண்ணெய் சரக்குகளை, வர்த்தகர்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அந்த அளவு வழக்கமான ஒப்பந்த விநியோகத்துடன் ஒப்பிடும்போது குறைவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.