Mohammed Bin salman  reuters
உலகம்

ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?

ஏமனில் ஹவுதிகளின் தாக்குதல்களை தடுக்க சவுதி இளவரசரின் புதிய முயற்சி!

PT WEB

ஏமனில் ஹவுதிகளின் தாக்குதல்களை தடுக்க சவுதி அரேபியா 1 பில்லியன் டாலர் வழங்க திட்டமிட்டதாக தகவல். ஈரான் ஆதரவு ஹவுதிகளுடன் போர்நிறுத்தம் செய்ய சவுதி இளவரசர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த நடவடிக்கை பிராந்திய அமைதிக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

செய்தியாளர் - M.மீரா

ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளின் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் சவுதி அரேபியா திணறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தாக்குதல்களை நிறுத்துவதற்காக ஹவுதிகளுக்கு 1 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,400 கோடி வழங்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் .

Airport attack

ஏமனில் ஈரான் ஆதரவுப் பெற்ற ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. சர்வதேச கடல்வழிப் பாதையான செங்கடல் பகுதியை ஹவுதி கைப்பற்றியிருக்கும் நிலையில், அதனை மீட்கும் முயற்சியில் ஏமன் அரசுப் படைகளுடன் இணைந்து சவுதி அரேபியா படைகளும் ஹவுதி மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேசமயம், ஹவுதிகள் சவூதி அரேபியாவின் பல முக்கிய விமான நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, விமான நிலையங்கள், ராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் அச்சுறுத்தல்கள் சவுதிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களை எதிர்கொள்ளமுடியாமல் நிலை குலைந்து போயுள்ளது சவுதி என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் வகையில் ஹவுதிகளுக்கு 1 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,400 கோடி வழங்க சவுதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Saudi Aramco

இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டு, ஈரான் மத்தியஸ்தத்தின் மூலம் ஹவுதிகளுடன் போர்நிறுத்தம் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் இஸ்ரேலின் Israel Hayom ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஹவுதிகளின் தாக்குதல்களை நிறுத்துவதற்காக 1 பில்லியன் டாலர் வழங்கும் திட்டம் குறித்து சவுதி பரிசீலிப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது. இந்தத் தொகையை ராணுவப் போக்குவரத்து விமானத்தில் கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்தத் தொகை உண்மையில் கொண்டு செல்லப்பட்டதா, ஹவுதிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா, அத்தகைய ஒப்பந்தம் ஏதேனும் எட்டப்பட்டதா என்பதற்கு அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஹவுதிகளின் தொடர் தாக்குதல்களை முடக்கி, பிராந்திய அமைதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இந்த செய்தி குறித்து சவுதி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..