பின்லேடன் மகன் ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை, சவுதி அரேபியா அரசு திரும்பப் பெற்றுள்ளது.
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன். 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவன் பின்லேடன். பாகிஸ்தானில் மறைந்திருந்த, பின்லேடனை அமெரிக்க சிறப்பு படையினர் அந்நாட்டுக்குள் புகுந்து சுட்டுக்கொன்றனர்.
பின்லேடனின் மகன் ஹம்சா, பின்லேடன் மறைவுக்கு பின் அந்த இயக்கத்தின் தலைவராகும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீபகாலமாக பயங்கரவாதிகளிடம் பெரும் செல்வாக்கை பெற்ற ஹம்சா அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்த தீட்டம் தீட்டிவரு வதாக தகவல்கள் வெளியாயின. இதனால் அமெரிக்கா, ஹம்சா பின்லேடனை தீவிரமாக தேடி வருகிறது.
ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பகுதியில் அவர் பதுங்கியிருக்கலாம் என்று அமெரிக்கா கருதுகிறது. இந் நிலையில் ஹம்சாவை தேடப்படும் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த அமெரிக்கா, அவரைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 7 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இதற்கிடையே ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமை சவுதி அரேபியா அரசு திரும்பப் பெருவதாக நேற்று அறிவித்துள்ளது. சவுதி மன்னரின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் வெளியறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.