50 ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த கஃபாலா என்ற தொழிலாளர் நடைமுறையை சவூதி அரேபியா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
வளைகுடா நாடுகளில் பணியமர்த்தப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் ஒருமுறைதான் கஃபாலா. சுருக்கமாகச் சொன்னால், கஃபாலா என்பது தொழிலாளர்களைச் சுரண்டல் மற்றும் மனிதாபிமானமற்ற நிலைமைகளுக்கு ஆளாக்கும் ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பு அதன் பெயரை அரபு வார்த்தையான கபாலாவிலிருந்து பெறுகிறது. இதன் பொருள், ’ஸ்பான்சர்ஷிப்’ என்பதாகும். இது பல தசாப்தங்களாக வளைகுடா முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர் கட்டுப்பாட்டின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. இந்த நடைமுறை மூலம், முதலாளிகள் தங்களின் தொழிலாளர்கள் மீது முழு ஆதிக்கம் செலுத்தலாம். அவர்களின் விசா, பயணம், தங்கும் இடம், உணவுச் செலவுகள் உள்ளிட்டவற்றை ஸ்பான்சர் செய்பவர் ஏற்றுக் கொள்வார். இதனால், தொழிலாளர்கள் தமது விருப்பப்படி சொந்த நாடு அல்லது ஊருக்குத் திரும்பவோ அல்லது பணியை மாற்றவோ முடியாது.
இப்படி, பல ஆண்டுகளாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பரவலாக துஷ்யேகம் செய்யப்படுவதை ஊக்குவிக்கும் இந்த அமைப்பை உலகளாவிய உரிமைகள் குழுக்கள் கண்டித்து வந்தன. உரிமைக் குழுக்களால், ’நவீன கால அடிமைத்தனம்’ என்று பரவலாக விமர்சிக்கப்பட்ட இந்தச் சீர்திருத்தத்தால், சவூதி அரேபியாவில் மட்டும் கிட்டத்தட்ட 13 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் சவூதி தொழிலாளர்களில் பெரும் பகுதியினரான 2.5 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் அடங்குவர். தவிர, பங்களாதேஷ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
தற்போது இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. பல வருட ஆய்வுகள், சீர்சிருத்தங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த நடைமுறையை நீக்குவதற்கான முடிவை தற்போது சவூதி அரேபியா எடுத்துள்ளது. கபாலா முறை ஒழிப்பு என்பது இளவரசர் முகமது பின் சல்மானின் தொலைநோக்கு திட்டம் 2030இன் ஒரு பகுதியாகும். கபாலா ஒழிப்பு மூலம், புலம்பெயர் தொழிலாளர்கள் ஸ்பான்சர் செய்வரின் ஒப்புதல் இல்லாமல் நாட்டைவிட்டு வெளியேறலாம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்களை அணுகலாம். இது பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்தவும், உலகளாவிய முதலீட்டை ஈர்க்கவும், ராஜ்ஜியத்தின் பிம்பத்தை மாற்றியமைக்கவும் ஓர் உந்துதலாகும். புதிய கட்டமைப்பின்கீழ், சவூதி அரேபியா ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு முறைக்கு மாறும் என்றும் கூறப்படுகிறது.
சவூதி அரேபியாவில் கஃபாலா நடைமுறைக்கு முடிவுரை எழுதப்பட்டாலும், பல வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் இது தொடரவே செய்கிறது. வளைகுடா நாடுகளில் சுமார் 24 மில்லியன் தொழிலாளர்கள் இன்னும் கபாலா பாணி கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றனர். இதில் இந்தியர்கள் 7.5 மில்லியன் மக்கள் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட வளைகுடா முழுவதும் கஃபாலா அமைப்பு இன்னும் உயிருடன் உள்ளது.
மேலும் லெபனான் மற்றும் ஜோர்டான் போன்ற இடங்களிலும் சற்று மாற்றியமைக்கப்பட்ட வடிவங்களில் தொடர்கிறது. 2022 உலகக் கோப்பைக்கு முன்பு கத்தார் சில விதிகளை தளர்த்தியது. இதனால் முதலாளியின் அனுமதியின்றி தொழிலாளர்கள் வேலைகளை மாற்ற அனுமதித்தது. ஆனால், வெளியேறும் விசாக்கள் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அப்படியே உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் சிறிய சீர்திருத்தங்களைச் செய்தன. ஆனால் சவூதி அரேபியா மட்டுமே கபாலாவை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. கஃபாலா முறையை ஒழிப்பது மிகப்பெரியது என்றாலும், அதற்கு எதிரான போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்படக்கூடிய அதேநேரத்தில், சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கை, இதர வளைகுடா நாடுகளிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.