கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதோடு நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர்.
எனினும் இந்த இழப்பில் இருந்து மீண்ட ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீது கடுமையாக தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவை ஈரானால் கடுமையாக தாக்கப்பட்டது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. இதனால் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
வளைகுடா நாடுகள் நீண்ட காலமாக அமெரிக்காவின் பாதுகாப்பை நம்பியே செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்த போரில் ஈரானின் டிரோன் மற்றும் ஏவுகணைகளில் இருந்து வளைகுடா நாடுகளை அமெரிக்கா பாதுகாக்கவில்லை. இதன் காரணமாக இந்த நாடுகளுக்கு அமெரிக்க பாதுகாப்பின் மீது இருந்த நம்பிக்கை சரிந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இனி அமெரிக்காவை மட்டுமே நம்பினால் பயனில்லை என்று முடிவு செய்து சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் சொந்த ராணுவத்தை நவீனமாக்க முடிவு செய்துள்ளன. அதன்படி நவீன போர் ஆயுதமான டிரோன்களை அதிகளவில் சவூதி அரேபிய அரசு வாங்கிக் குவித்து வருகிறது.
அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் , சவூதி அரேபியா உலகிலேயே அதிகளவில் டிரோன்களை வாங்கி குவித்துள்ளது என்றும், பிற நாடுகளை விட அதிகளவில் இதற்கு செலவு செய்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டிலிருந்து ஒரு மாதத்தில் ஒரு நாடு மேற்கொண்ட மிகப்பெரிய டிரோன் கொள்முதல் இது என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு கடந்த வாரம் தைவான் நிதியமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, சவூதி அரேபியா 4 கோடியே 72 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான டிரோன்களை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த நாடு அமெரிக்கா ராணுவ பாதுகாப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.