Samsung
Samsung  File Image
உலகம்

மீண்டும் காப்புரிமை வழக்கில் அபதாரம் பெற்ற சாம்சங் நிறுவனம்! இந்த முறை எத்தனை கோடிகள் தெரியுமா?

Justindurai S

உலகின் முன்னணி மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், காப்புரிமையை மீறிய குற்றத்துக்காக நெட்லிஸ்ட் நிறுவனத்துக்கு 303 மில்லியன் டாலரை (24,85.83 கோடி ரூபாய்) அபராதமாக வழங்க வேண்டும் என டெக்சாஸில் உள்ள ஃபெடரல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தரவு செயலாக்கத்தில் மேம்பாடுகளுடன் தொடர்புடைய காப்புரிமைகளை சாம்சங் நிறுவனம் மீறியதாக, கணினி நினைவக நிறுவனமான நெட்லிஸ்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சாம்சங் நிறுவனம் பயன்படுத்திய 'மெமரி மாட்யூல்' என்ற கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம், தங்களுடைய படைப்பு என உரிமை கொண்டாடியது நெட்லிஸ்ட் நிறுவனம்.

இதுதொடர்பான விசாரணையில் சாம்சங் நிறுவனம் காப்புரிமையை மீறியதை நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், இந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் தமது தரப்பு ஆதாரங்களை நிரூபிக்க தவறியது. இதையடுத்து காப்புரிமையை மீறிய குற்றத்துக்காக நெட்லிஸ்ட் நிறுவனத்துக்கு 303 மில்லியன் டாலரை (24,85.83 கோடி ரூபாய்) அபராதமாக வழங்க வேண்டும் என சாம்சங் நிறுவனத்துக்கு டெக்சாஸில் உள்ள ஃபெடரல் நடுவர் மன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

காப்புரிமை வழக்கில் சிக்குவது சாம்சங் நிறுவனத்துக்கு இது முதல்முறை கிடையாது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தின் காப்புரிமையை பயன்படுத்திய குற்றத்துக்காக அந்த நிறுவனத்துக்கு 12 கோடி டாலர் அளிக்க வேண்டும் என சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.