எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் எக்ஸ் தளம்
உலகம்

OpenAI நிறுவனத்தை விலை பேசிய எலான் மஸ்க்.. பதிலடி கொடுத்த சாம் ஆல்ட்மேன்!

செயல் நுண்ணறிவு தளம் சாட் ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐயை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

Prakash J

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DODGE-இன் தலைவராக உள்ளார். அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. இந்த நிலையில், செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஓபன் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர். ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார்.

elon musk, open ai

இந்த நிலையில் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் (ரூ. 8.45 லட்சம் கோடி) டாலர் கொடுத்து வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் இதற்கு சாம் ஆல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்தை வேண்டுமானால் 9.74 பில்லியனுக்கு வாங்க தயாராக இருப்பதாகக் கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு எலான் மஸ்க் பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி, அதை ’எக்ஸ்’ எனப் பெயர் மாற்றியதுடன், பல்வேறு விதிமுறைகளையும் புகுத்தி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.