சமீபகாலமாக விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர, அநாகரிகச் செயல்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் திடீரென உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அந்த வகையில் கடந்த வாரங்களில் மட்டும் தென்கொரியா, அஜர்பைஜான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் விமான விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் உயிரிழந்தனர். குறிப்பாக,, தென்கொரியா விமானத்தில் 181 பேர் பயணித்த நிலையில், 179 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், விமானத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு, ஆபத்து சற்று குறைவு என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு டைம் இதழ், 35 ஆண்டுகால விமான விபத்து தரவுகளை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது. அதன்படி, விமானத்தில் கடைசி இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களில், 32 சதவீத்தினரே விபத்துகளில் இறந்துள்ளனர். அதற்கு முன்னால் உள்ள இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களில், 38 சதவீதத்தினர் இறந்துள்ளனர். இதேபோன்று பல்வேறு ஆய்வுகளும், பின் இருக்கைகளில் அமர்ந்து பயணிப்போர் உயிரிழப்பது குறைவாக இருப்பதாக தெரிவிக்கின்றன.