செய்தியாளர் - M. மீரா
2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் இடையே போர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், 20 லட்சத்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிரிழப்பு அல்லது காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று வியூக மற்றும் சர்வதேச ஆய்வு மையம் (CSIS) மையம் தெரிவித்துள்ளது. இதில் ரஷ்யாவின் படைகளே அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளன. போரினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று இந்த ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
வெளியான ஆய்வு அறிக்கையின்படி கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் காணாமல் போன வீரர்கள் உட்பட ரஷ்யா மொத்தம் 14 லட்சம் இழப்புகளைச் சந்தித்துள்ளது. இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 1 சதவீதத்திற்குச் சமமான எண்ணிக்கையாகும்.
இந்த இழப்புகள் ரஷ்யாவின் ஏழ்மையான பகுதிகள் மற்றும் இனச் சிறுபான்மையினர் இருக்கும் பகுதிகளில் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். ரஷ்யாவில் சிறிய கிராமங்களில் இருக்கும் ஆண்கள் கிட்டத்தட்ட முழுமையாக அழிந்துபோயிருக்கிறார்கள் என்று ரஷ்ய எதிர்க்கட்சி ஊடகங்களில் பரவலாக வெளிவருகின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா பங்கேற்ற அனைத்துப் போர்களிலும் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளை விட, உக்ரைனில் ரஷ்யா சந்தித்துள்ள உயிரிழப்புகள் நான்கு மடங்கு அதிகம். அதேபோல், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் ஒன்றியம் மற்றும் ரஷ்யா பங்கேற்ற அனைத்துப் போர்களிலும் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளை விட இது ஒன்பது மடங்குக்கும் அதிகமாகும் என்று இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் உயிரிழப்பு மற்றும் காயம் பட்டவர்களின் விகிதம் ஏறக்குறைய 8:1 என்ற நிலையில் இருக்கிறது. அதாவது, கொல்லப்பட்ட, காயமடைந்த அல்லது காணாமல் போன ஒவ்வொரு உக்ரேனிய வீரருக்கும் ஈடாக, எட்டு ரஷ்யர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதாகும் .
போரின் பெரும்பகுதியில், ஒரு உக்ரேனிய இழப்பிற்கு இரண்டு முதல் மூன்று ரஷ்ய உயிரிழப்புகள் என்ற விகிதத்தில் இருந்தது. சமீபத்திய இந்த அதிகரிப்பிற்குக் காரணம் உக்ரேனின் ஆழமான பாதுகாப்பு உத்தி, ரஷ்ய வீரர்களைக் கொல்வதிலும் காயப்படுத்துவதிலும், அத்துடன் ரஷ்யாவின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதிலும் திறம்படச் செயல்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் நடந்து வரும் உக்ரைன் - ரஷ்யா போர், வரலாற்றிலேயே மிகவும் இரத்தக்களரியான மோதலாக கருதப்படும் இரண்டாம் உலகப் போரை கடந்துவிட்டது என்று இந்த ஆய்வு கூறுகிறது.