Russia's attack
Russia's attack pt
உலகம்

மோசமான புத்தாண்டை பரிசளித்த ரஷ்யா.. தொடர்ந்து பாய்ந்த ராக்கெட்டுகள்.. 30 பேர் பலி!

யுவபுருஷ்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுக்கத் தொடங்கியது ரஷ்யா. ஆனால், ரஷ்யாவுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவி அளித்து உக்ரைனின் ராணுவ பலத்தை வலுவாகவே வைத்திருக்கிறது. இதனால், சிறு நாடாக இருக்கும் உக்ரைன், ரஷ்யாவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இன்னும் 2 மாதங்களில் 2 ஆண்டை தொடப்போகும் இந்த போரில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை ஒரே நேரத்தில் நிகழ்த்தியுள்ளது ரஷ்யா.

உக்ரைனின் கீவ் உட்பட பல்வேறு இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், 158 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. மகப்பேறு மருத்துவமனை, கல்வி நிலையங்கள், குடியிருப்புகள் மற்றும் பார்க்கிங் இடங்கள் என்று பல இடங்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி சுமார் 30 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், ‘ரஷ்யாவின் 158 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 114 ஐ சுட்டு வீழ்த்தினோம்’ என்று தெரிவித்துள்ள்னர்.

ரஷ்யா தனது கிடங்கில் என்னனென்ன ஆயுதங்கள் இருந்தனவோ அத்தனையையும் பயன்படுத்தியுள்ளது என்று உக்ரைன் அதிபர் விலாதிமீர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்றும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்காகவும் தொடர்ந்து போராடுவோம் என்றும் கூறியுள்ளார் அவர். தாக்குதலில் 160 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புது வருடம் பிறப்பதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு மோசமான புத்தாண்டை பரிசளித்துள்ளது ரஷ்யா.