ஐகர் கிரில்லாவ் x page
உலகம்

தொடரும் மோதல் | மாஸ்கோ நகரிலேயே நடந்த சம்பவம்.. குண்டுவெடிப்பில் சிக்கி ரஷ்ய தளபதி உயிரிழப்பு!

ரஷ்யாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி அணுஆயுத பாதுகாப்புப் படையின் தளபதி உயிரிழந்தார்.

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணைகள், அணு ஆயுதம் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட உதவிகளைச் செய்திருப்பதாக அமெரிக்கா, உக்ரைன், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிப்படுத்தியிருந்தன.

இந்த நிலையில், ரஷ்யாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி அணுஆயுத பாதுகாப்புப் படையின் தளபதி உயிரிழந்தார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு வெளியே இருசக்கர வாகனத்தில்வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்துச் சிதறி உள்ளது. ரஷ்யாவின் அணுஆயுத, ரசாயன பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஐகர் கிரில்லாவ் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த குண்டுவெடிப்பால் குடியிருப்பு கட்டடத்தின் முன்பகுதி இடிந்து சேதமடைந்தது. இதில் மேலும் ஒருவரின் உடல், கட்டட இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, உக்ரைனின் ராணுவ நிலைகளை தங்கள் படைகள் தகர்த்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி உக்ரைனில் உள்ள ரேடார்கள், ராணுவ விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்புகள், ஏவுகணை அமைப்புகள் ஆகியவை தகர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 100க்கும் மேற்பட்ட ராக்கெட்கள் மற்றும் ட்ரோன்களை வானில் இடைமறித்து தகர்த்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பகுதியில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் சண்டை நடந்து வருவதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன. அதோடு, ரஷ்ய ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.