சோளக்காட்டில், விமானத்தை தரையிறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு, ’ஹீரோ ஆப் ரஷயா’ என்ற விருதை அந்நாடு வழங்க இருக்கிறது.
மாஸ்கோவில் இருந்து 226 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் யுரல் ஏர்பஸ் 312 என்ற விமானம் கிரீமியாவிற்கு புறப்பட்டது. விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பறவைகள் கூட்டம் ஒன்று வந்து விமானத்தின் எஞ்சின் மீது மோதியது. இதனையடுத்து விமானத்தின் கீழ் பகுதியில் லேசான தீ ஏற்பட்டது. அத்துடன் விமானம் ஆடத் தொடங்கியது. விமானம் தொடர்ந்து பயணித்தால் விபத்துக்குள்ளாக நேரிடும் என்பதால், உடனடியாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார் விமானி. ஆனால், அருகில் விமான நிலையம் இல்லாததால், சோளக்காட்டில் விமானத்தை தரையிறக்கினார்.
விமானியின் சாதுரியத்தால், விமானத்தில் பயணித்த அத்தனை பேரும் பத்திரமாக வெளியேறினர். அவர்கள் அனைவரும் விமானி, டாமிர் யுசுபோவ் (41)வை கட்டியணைத்து பாராட்டுகளையும் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றியையும் தெரிவித் தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவரது திறமையை பாராட்டி ஏராளமானோர் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த விமானத்தை இயக்கிய விமானிகள் டாமிர் யுசுபோவ், ஜியார்ஜி முர்ஸின் ஆகியோருக்கு ’ஹீரோ ஆஃப் ரஷ்யா’ என்ற விருது வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அந்த விமானத்தில் பயணித்த விமான ஊழியர்களுக்கு தைரியத்துக்கான விருது வழங்கப்பட இருக்கிறது.