உலகம்

விஷம் வைத்து கோமா நிலைக்கு தள்ளப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் !

விஷம் வைத்து கோமா நிலைக்கு தள்ளப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் !

Sinekadhara

ரஷ்ய எதிர்கட்சித் தலைவரும், அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர விமர்சகருமான அலெக்ஸி நவால்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிபருக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருவதால், அவரை கொல்ல சதி நடந்திருப்பதாகவும், அதனால் தேநீரில் விஷம் வைத்துக் கொடுத்துவிட்டதாகவும் நவால்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

44 வயதான நவால்னி, ஊழல் தடுப்பு பிரச்சாரத்திற்காக செர்பியாவின் டோமஸ்க் நகரிலிருந்து விமானத்தில் மாஸ்கோ வரை சென்றிருக்கிறார். ஆனால் விமானம் பாதி வழியில் இருக்கும்போதே திடீரென நவால்னிக்கு வியர்க்கத் தொடங்கியுள்ளது. அவர் அசௌகரியமாக உணர்வதாகவும் தன்னுடன் பேசிக்கொண்டே இருக்கும்படியும் கிராவிடம் கூறியுள்ளார். ஆனால் இடையில் கழிவறைக்குச் சென்ற அவர் அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார். அதனால் விமானம் அவசர அவசரமாக ரஷ்யாவின் ஓம்ஸ்க் நகரில் தரையிறக்கப்பட்டது. அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த நடமாடும் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக கூறிவிட்டனர். செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு, உயிருக்கு போராடி வருவதாக கிரா தெரிவித்துள்ளார்.

விமானம் ஏறுவதற்கு முன்பு தேநீர் அருந்தியதாகவும், அதற்குப்பிறகுதான் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தேநீரில் விஷம் கலந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் மருத்துவர்கள் அனைத்து தகவல்களையும் பகிர்ந்துகொள்ள தயாராக இருந்ததாகவும், பின்னர் விஷம் இருக்கிறதா என சோதனை செய்ய தாமதப்படுத்தியதாவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் மருத்துவமனை முழுவதும் போலீஸ் மற்றும் அதிகாரிகளால் நிறைந்திருப்பதாகவும், அவருடைய மனைவிக்குக்கூட அனுமதி மறுக்கப்ப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் உள்ள ஒரு சிறப்பு விஷக் கட்டுப்பாட்டு மையத்திற்கு மாற்ற முற்படுவதாகவும், ஆனால் மருத்துவர்கள் அவரது நிலை குறித்த பதிவுகளை வழங்க மறுப்பதாக கூறுகின்றனர். விஷம் கொடுக்கப்பட்டதாக என உறுதியாக தெரியவில்லை. மேலும் இந்த நிலைக்கு பல காரணங்கள் இருக்கலாம் என துணை மருத்துவர் அனடோலி கெலினிஷென்கோ கூறியுள்ளார்.

நவால்னியின் கட்சிக்காரர்கள், விளாடிமிர் புடின் இந்த செயலை செய்திருந்தால், அவருக்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என எச்சரித்துள்ளனர். ஏற்கெனவே நவால்னியை கிருமிநாசினி கொண்டு தாக்கியதில் அவருடைய ஒரு கண் பாதிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிடவும் நீதிமன்றம் தடை விதித்தது. புடினின் ஆட்சிக்கு எதிராக பேசுபவர்களை தாக்குவது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே அரசின் கொள்கைகளை எதிர்த்த பியோட்டர் வெர்ஸிலோவ், விளாடிமிர் காரமுர்ஸா ஆகியோர் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். எனவே இதுவும் ஆளும்கட்சியின் திட்டமிட்ட செயலாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளனர்.