அலெக்ஸி நவல்னி
அலெக்ஸி நவல்னி கோப்புப்படம்
உலகம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் திடீர் மரணம்... சந்தேகம் எழுப்பும் உலக நாடுகள்!

PT WEB

செய்தியாளர்: பால வெற்றிவேல்

ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, எமலோ நெனெட்ஸ் பிராந்தியத்தில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவர் சிறையின் திடீரென மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலெக்ஸி நவல்னி

47 வயதாகும் ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவரான இவர் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்தார். மேலும் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தும் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது இறப்பு குறித்து ரஷ்ய சிறைச்சாலை நிர்வாகம் தெரிவிக்கையில், “நடைப்பயிற்சியில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்து உடனடியாக உயிரிழந்தார்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், மாஸ்கோவிற்கு வடகிழக்கே சுமார் 1,900 கிமீ தொலைவில் உள்ள யமலோ-நெனெட்ஸ் சிறைச்சாலையில் இருந்த அலெக்ஸி நவல்னி மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ ஊழியர்கள் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்களால் நவல்னியை காப்பாற்ற முடியவில்லை என்றும், இனிதான் மரணத்திற்கான காரணத்தை அறியவேண்டியுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான டிமிட்ரி முராடோவ், சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணம் "கொலை" என்று கூறியுள்ளார்.

அலெக்ஸி நவல்னி

“ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டு கொலை செய்துவிட்டார். இது ரஷ்ய அரசின் எதச்சதிகாரப் போக்கு” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் நவல்னியின் மரணத்திற்கு ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம், உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.