russia ship
russia ship twiter
உலகம்

ரஷ்யாவின் போர்க்கப்பல் ட்ரோன் மூலம் தாக்கி மூழ்கடிப்பு - இரண்டாவது முறை உக்ரைன் சொன்ன பரபரப்பு தகவல்

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர் 2 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவுக்குச் சொந்தமான படைக்கப்பலை கருங்கடல் பகுதியில் தாக்கி மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை, ’வீரா்களையும், ஆயுத தளவாடங்களையும் எதிரி நாடுகளுக்கு ஏற்றிச் செல்லும் ரஷ்யாவின் படைக் கப்பலான சீசா் குனிகோவ், ஆளில்லா படகு (கடல் ட்ரோன்) மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவான ஜியுஆரின் சிறப்பு படைப் பிரிவு, மகுரா வி-5 ரக கடல் ட்ரோன் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியது. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்தின் அலுப்கா நகருக்கு அருகே சீசா் குா்னிகோவ் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது’ என அது தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் புதிய கப்பல்களில் ஒன்றான புராஜெக்ட் 775 சீசா் குனிகோவ் என்ற போர்க்கப்பலில் 87 பணியாளர்களை அழைத்துச் செல்ல முடியும். மேலும் இந்தக் கப்பல் ஜார்ஜியா, சிரியா மற்றும் உக்ரைன் போர்களில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், இதுகுறித்து ரஷ்ய ராணுவம் எந்த அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை. அதேநேரத்தில், கருங்கடலில் ரஷ்ய படைக் கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் கூறுவது கடந்த 15 நாட்களில் இது 2வது முறையாகும். ஏற்கெனவே, ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் ரஷ்யாவின் தாக்குதல் கப்பல் ஒன்றை தாக்கி மூழ்கடித்ததாக உக்ரைனின் ஜியுஆா் முன்னதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.