நேட்டோ கூட்டணியில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இதையடுத்து, தொடங்கிய இரு நாடுகளுக்கு இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்தசூழலில் தான், இன்று உக்ரைன் எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில், ரஷ்யாவின் யாரோஸ்லாவ் பிராந்தியத்தில் உள்ள அதிமுக்கிய எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்களைக் கொண்டு அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யாவின் பெடரல் அவசரகால இருப்பு முகமைக்குச் சொந்தமான ‘டெம்ப்’ என்ற எரிபொருள் சேமிப்பு வளாகமே இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்காகும். ட்ரோன்கள் மோதியதைத் தொடர்ந்து, அந்த ஆலையில் ராட்சத எரிபொருள் தொட்டிகள் வெடித்துச் சிதறி பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நகரம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாரோஸ்லாவ் நகரில் இருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கிச் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு யாரோஸ்லாவ் பிராந்திய ஆளுநர் மிகைல் எவ்ரேவ் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, ரஷ்டாவின் ஓரியோல் (Oryol) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்ததாக ஓரியோல் பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி கிளிச்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், இந்த தாக்குதல் குறித்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ஆக்கிரமிப்பு நாட்டின் (ரஷ்யா) கையிருப்புக்கு முக்கியமான ஒரு எண்ணெய் சேமிப்புக் கிடங்கை நமது நாட்டுப் படைகள் தாக்கியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.