Russian couple climb to top of NYC Empire State insta
உலகம்

1,454 அடி உயரமுள்ள கட்டடம்.. உச்சிக்கு ஏறிய ஜோடி.. காதலுக்காக உயிரைப் பணயம் வைத்த கதை!

கோபுரத்தின் உச்சிக்குச் சென்ற அவர்கள், உலக அமைதியை வலியுறுத்தி ஒரு பெரிய கருப்புப் பதாகையை விரித்தனர்.

Prakash J

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சிக்குச் சென்று மோதிரம் மாற்றி காதலை பரிமாறிக்கொண்ட ஜோடி இணையத்தில் வைரலான நிலையில், சட்டவிரோதமாக ஏறியதாகக் கூறி அவர்கள் இருவரையும் கைதுசெய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் ஏஞ்சலா நிகோலாவ் மற்றும் இவான் பீர்கஸ். காதலர்களான இவர்கள் இருவரும் உலகளவில் உயரமான கட்டடங்களின் உச்சிக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றி ஏறி புகைப்படம் எடுக்கும் வழக்கத்தைக் கொண்டவர்கள். இந்த நிலையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் பொதுவான பார்வையாளர்கள் பகுதிக்கும் மேலே உள்ள, அதன் 1,454 அடி (443 மீட்டர்) உயரமுள்ள மிகக் குறுகிய ஆண்டெனா கோபுரத்தின் உச்சிக்குச் சென்றனர். அதாவது, இவர்கள் இருவரும் கறுப்பு உடையில், முகமூடி அணிந்து எவ்வித பாதுகாப்பு கயிறுகளும் இன்றி அதன்மீது ஏறியுள்ளனர். கோபுரத்தின் உச்சிக்குச் சென்ற அவர்கள், உலக அமைதியை வலியுறுத்தி ஒரு பெரிய கருப்புப் பதாகையை விரித்தனர். அதில், "அதிகாரத்தின் மீதான காதலைவிட, காதலின் அதிகாரம் வெல்லும்போதுதான் இவ்வுலகம் அமைதியைக் காணும்" என எழுதப்பட்டிருந்தது.

அதன்பிறகு கோபுரத்தின் சற்றுக் கீழ்ப்பகுதிக்கு வந்த இவான், திடீரென ஒரு முழங்காலிட்டு ஏஞ்சலாவிடம் தனது திருமண விருப்பத்தை வெளிப்படுத்தி மோதிரத்தை மாற்றினார். பின்னர், இருவரும் கட்டிப்பிடித்து தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக நியூயார்க் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள், அங்குச் சென்று விசாரணை நடத்தினர். இறுதியில், அவர்கள் உரிய அனுமதியின்றி மிக ஆபத்தான தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.