கமிலா பெல்யாட்ஸ்காயா கோப்புப்படம்
உலகம்

கடற்கரையில் யோகா செய்த ரஷ்ய நடிகை.. திடீர் அலையால் நேர்ந்த சோகம்!

தாய்லாந்தின் கோசாமுய் தீவில் உள்ள கடற்கரையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

Prakash J

24 வயது நிறைந்த ரஷ்ய நடிகையான கமிலா பெல்யாட்ஸ்காயா, தனது காதலனுடன் விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்றிருந்தார். அங்குள்ள கோ ஸ்யாமுய் கடற்கரையில் உள்ள லாட் கோ வியூ பாயின்ட்டுக்கு சென்று யோகா செய்தார். இதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இந்த நிலையில் எதிர்பாராத ராட்ச அலை எழும்பி, அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

அருகிலிந்த நபர் ஒருவர், அவரைக் காப்பாற்ற முயன்றும் அதில் பலனில்லை. பின்னர், அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அவரது உடல் மீட்கப்பட்டது. முன்னதாக, அந்த இடம் குறித்து அவர், “எனக்கு ஸ்யாமுய் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த இடம், இந்த பாறை கடற்கரை என் வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த விஷயம். பிரபஞ்சம். நான் இப்போது இங்கு இருப்பதற்கு நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

நடிகையின் மரணம் தொடர்பாக ஸ்யாமுய் மீட்பு மையத்தின் தலைவரான சாய்போர்ன் சப்பிரசெர்ட், “கோ ஸ்யாமுய் கடற்கரைகள் முழுவதும் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், பார்வையாளர்களுக்குத் தெரியும் வகையில் எச்சரிக்கை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. மேலும், மழைக்காலத்தின்போது சுற்றுலாப் பயணிகளை நாங்கள் தொடர்ந்து எச்சரிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் நடிகை யோகா செய்த இடத்தில் எச்சரிக்கை கொடிகள் மற்றும் பலகைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடம் இயற்கைக் காட்சிகளை ரசிக்கக்கூடியதாக இருந்துள்ளது. அந்த வகையில், எதிர்பாராத அலையின் காரணமாகவே, அவர் இந்த விபத்துக்கு ஆளாகியிருக்கலாம் என அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.