உலகம்

உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சகம்

Veeramani

உக்ரைனில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலெக்ஸி ஜைட்சேவ், உக்ரைனில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று தெரிவித்தார். மேலும், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்பது மேற்கத்திய அதிகாரிகள் பகிரங்கமாக விவாதித்த ஆபத்து ஆகும். ஆனால் உக்ரைன் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் இவை பயன்படுத்தப்படாது எனக் கூறினார்.



முன்னதாக, உக்ரைன் மீதான அணுசக்தி மோதலின் அபாயங்களை மேற்குலக நாடுகள் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் முன்பு கூறியிருந்தார்.  அதுபோல, ஏப்ரல் 14 அன்று சிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ், ரஷ்யா சாத்தியமான அணு ஆயுதங்கள் அல்லது குறைந்த சக்தி கொண்ட அணு ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தக்கூடும் என்று எச்சரித்திருந்தார். ரஷ்யாவின் இந்த அணு ஆயுத எச்சரிக்கைகள் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்று உலக நாடுகள் கவலை தெரிவித்திருந்தன.

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேரக்கூடாது என்று வலியுறுத்தி பிப்ரவரி 24ஆம் தேதி அந்த நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. பல்வேறு கட்ட சமாதான முயற்சிகளையும் தாண்டி 70 நாட்களுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது.