ரஷ்ய ஆதரவு கூலிப்படையான 'வாக்னர்' அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியது உக்ரைன் போரில் திடீர் திருப்பமாக அமைந்தது. ஆனால், தற்போது வாக்னர் குழு தனது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளது. அதிபர் புதினுடன், சமாதான பேச்சுவார்த்தைக்கு அந்தக் குழு உடன்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் கணபதி புதிய தலைமுறைக்கு இன்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “ரஷ்ய அரசுக்கு எதிராக வாக்னர் குழு சென்றதை நாம் புதிது என சொல்ல முடியாது. ஏனென்றால் ரஷ்யாவின் அரசியலமைப்பை நாம் பார்க்கும் பொழுது, பிரிவு 13, 71-ஐ பார்க்கும் போது தனியார் ராணுவம் இருக்கக் கூடாது. ஆனால் இதில் செய்யப்பட்ட திருத்தம் காரணமாக வாக்னர் குழு அனுமதிக்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு வாக்னர் குழு வந்தது. அதற்கு முன் லிபியா உள்ளிட்ட பல நாடுகளில் வாக்னர் குழு செயல்பட்டது.
வாக்னர் குழுவின் செயல்பாடுகள் அனைத்தும் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிரானவை அல்ல. அந்நாட்டு ராணுவ துறை அமைச்சரான உடன் தான். பண பிரச்சினைகள் காரணமாகத்தான் இது ஏற்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வாக்னருக்கு வழங்கப்பட்டு வந்த பணம் நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் குறிப்பாக 24 மணி நேரம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வாக்னர் குழு சார்பில் ‘நாங்கள் மாஸ்கோ நோக்கி செல்கிறோம்; மாற்றம் வர இருக்கிறது; புதிய அதிபர் வர இருக்கிறார்’ என சொல்லியது மிகப்பெரிய தவறு. இந்த நிலை காரணமாக ரஷ்யா-உக்ரைன் போருக்கு எந்த பிரச்சினை ஏற்படும் என்பதை நாம் இந்த நேரத்தில் கவனிக்க வேண்டும். புதின் இன்னும் நல்ல நிலையில் தான் இருக்கிறார். புதினுக்கு ரஷ்யாவைச்சேர்ந்த 80 சதவீத மக்களின் ஆதரவு இருக்கிறது என நான் நினைக்கிறேன். புதினை பொறுத்தமட்டில் எந்த விஷயத்திலும் பின்வாங்க மாட்டார். புதின் பின் வாங்கினால் மேற்கு நாடுகளுக்கு வெற்றி என நினைப்பார்கள்.
இந்த நேரத்தில் சீன அதிபர், புதினுடன் பேசவில்லை. இன்றைக்கு இருக்கும் நிலையில் வாக்னர் குழு மீண்டும் அரசுக்கு எதிராக திரும்பாது. ரஷ்யா, இந்தியாவுடன் நெருங்கிய நாடு. ரஷ்யா உடன் பாதுகாப்பு, எரிவாயு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நெருங்கிய உறவாக இருக்கிறோம். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையே நல்ல நெருங்கிய உறவு இருக்கிறது. நிச்சயமாக டெல்லியில் இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முழுமையாக ஆலோசிக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாடு தொடர்பாக அறிக்கை எதுவும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சிறிது நாட்களுக்கு பிறகு ரஷ்ய அதிபர் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிவாக பேச வாய்ப்பு உள்ளது” என்றார்.